பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பொறியாளர் பாலமுருகன். இவரின் மனைவி தீபா. மாற்றுத் திறனாளி கணித ஆசிரியரான தீபா, வி. களத்தூர் பள்ளியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற தீபா பள்ளி நேரம் முடிந்தும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. தீபாவின் கணவர் பாலமுருகன், பள்ளி உட்படப் பல்வேறு இடங்களில் விசாரித்துவிட்டு வி. களத்தூர் காவல் நிலையத்தில் தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு புகாரளித்தார்.
அதே தினம் அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன் மனைவி காயத்ரி பெரம்பலூர் காவல் நிலையத்தில், ‘பள்ளிக்குச் சென்ற தனது கணவர் வெங்கடேசன் வீடு திரும்பவில்லை கண்டுபிடித்துத் தாருங்கள்' என்று புகாரளித்தார். ஒரே பள்ளியில் வேலை செய்த இரண்டு ஆசிரியர்களும் மாயமானது பற்றி தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, நேரடி விசாரணை செய்து ஆசிரியர்களைக் கண்டுபிடிப்பதற்காக கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் ஆசிரியர் வெங்கடேசனின் உறவினர்கள், வெங்கடேசன் தேனியில் இருக்கும் தகவலறிந்து அங்கு சென்று அவரை குரும்பலூருக்கு அழைத்து வந்ததுடன் பெரம்பலூர் எஸ்.எஸ்.ஐ பாண்டியனுக்கும் தகவல் தந்தனர்.
அதற்கு எஸ்.எஸ்.ஐ. பாண்டியன், "இப்போது எனக்கு நிறைய பணி இருக்கிறது. நாளைக்கு நீங்களே காவல் நிலையம் அழைச்சிட்டு வாங்க” என்று அலட்சியமாகப் பதில் கூறிவிட்டு, தனது சொந்த அலுவல்களில் மூழ்கிவிட்டார். வெங்கடேசன் குரும்பலூர் வந்துள்ள தகவல் வி. களத்தூர் போலீஸுக்கு தகவல் கிடைத்தும் அவரை கைது செய்வதற்கு முயற்சி செய்யாமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதையடுத்து வெங்கடேசன் தலைமறைவானார்.
இந்த நிலையில், கோவை உக்கடம் பகுதியில் ஒரு சிவப்பு நிற கார் 3 நாட்களாக ஒரே இடத்தில் நின்றுள்ளது. அப்பகுதி கடைக்காரர்கள் உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவலளிக்க, போலீசார் விரைந்து சென்று அந்த காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை செய்ததில், அந்த கார் ஆசிரியை தீபாவின் கார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. காரின் உள்ளே தாலிக் கயிற்றில் இருந்த காசு, குண்டு ஆகியவை சிதறிக் கிடந்தன. காரின் பின்புற டிக்கியில் ரத்தக் கறையுடன் ஒரு சுத்தியல் கிடந்துள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கார் இருந்த இடத்தில் சோதனை செய்தனர். எதையும் கண்டறிய முடியவில்லை.
கோவை போலீசார், பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு தகவலளித்தனர். இதையடுத்து கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் காரை பெரம்பலூர் கொண்டு வந்தனர். சுத்தியலில் படிந்திருந்த ரத்தக் கறையை மருத்துவப் பரிசோதனை செய்ததில் அது ஆசிரியை தீபாவினுடையது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீபா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்தனர்.
விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தீபாவின் காரில், திருச்சி, சமயபுரம், மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய சாலைகளில் வெங்கடேசன் மட்டும் தனியாக பயணம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தீபாவை கொலை செய்து மறைத்துவிட்டு ஆசிரியர் வெங்கடேசன் மட்டும் தப்பிச் சென்றுள்ளார். இந்த வழக்கில் வெங்கடேசனுக்கு அடிக்கடி பெண்கள் சப்ளை செய்யும் பாலியல் புரோக்கர் மோகன் என்பவரைப் பற்றித் தெரிந்து அவரைக் கைது செய்து விசாரித்து வந்தது போலீஸ்.
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தனிப்படை காவல்துறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் தலைமையிலான தனிப்படை வெங்கடேசனை கைது செய்தனர். பின்பு பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணை செய்ததில் வெங்கடேசன், தீபாவுக்கும் தனக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. நான் ஆன்லைன் ட்ரேடிங்(online Trading) செய்ததில் பல லட்ச ரூபாய் இழந்துள்ளேன். அதற்காக தீபாவின் கணவரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி இருந்தேன். அந்த பணத்தை தீபா தன்னிடம் கேட்டு தொந்தரவு செய்து, ஜாதி பெயரை சொல்லி அவர் திட்டினார். அதனால் கோபமடைந்து தீபாவை 15 -11 -23 தேதி மாலை பள்ளி முடிந்து மங்களமேடு காவல் நிலைய சரகம் முருக்கன் குடி கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று சுத்தியால் அடித்து கொலை செய்து உடலை தீபா காரிலேயே எடுத்துச் சென்று திருச்சியை தாண்டி ஓரிடத்தில் வைத்து எரித்து விட்டு காரை கோயம்புத்தூர் உக்கடத்தில் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறியுள்ளார்
அதன் அடிப்படையில் வெங்கடேசன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வெங்கடேசனுக்கு 23 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த குறித்து சம்பவம் நடந்த 70 நாட்களுக்குப் பிறகு, காவல்துறை இந்த வழக்கில் மெத்தனமாக இருப்பது குறித்து நமது நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். நமது செய்தியை அடுத்து காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முடித்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.