மதுரையில் ஒரே பயனாளிக்கு மத்திய அரசின் தனிநபர் கழிவறை அமைக்கும் திட்டத்தில் நான்கு கழிவறைகள் கட்டியதாகக் கணக்கு காட்டியது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.
மதுரை அலங்காநல்லூர் அச்சம்பட்டி ஊராட்சியில் மத்திய அரசின் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 151 பயனாளிகளுக்கு கழிவறைகள் கட்ட, ஒரு கழிவறைக்கு 12 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் ஒரே பயனாளியின் பெயரில் மூன்று நான்கு முறை கழிவறைகள் கட்டப்பட்டதாக லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
வரிசை எண்ணை மட்டும் மாற்றி ஒரே தம்பதியின் பெயரில் பலமுறை கழிவறை கட்டியதாகப் பணமோசடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட பயனாளியின் வங்கிக் கணக்கில் ஒரே முறை மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் செல்லத்துரை, இது குறித்த புகார் வரவில்லை, உரிய விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல் கிசான் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழகம் முழுவதும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் அண்மையில் திருவாரூரில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டியதற்கு நன்றி என வீடு கட்டாத குடிசைவாழ் மக்களுக்கு கடிதம் வந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரையில் ஒரே பயனாளிக்கு நான்கு முறை கழிப்பறை கட்டியதாகக் கணக்கு காட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.