Skip to main content

ரணில் மீது ஊழல் விசாரணை! - மைத்ரிபால சிறிசேன அதிரடி ! 

Published on 25/11/2018 | Edited on 25/11/2018
m


இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவை அக்டோபர் 26-ந்தேதி நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.  மைதிரிபால சிறிசேனவின் இந்த அதிரடி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


ராஜபக்சேவின் நியமனத்தை எதிர்த்து இலங்கை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தன. இதனால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் நாடாளுமன்றத்தை இழுத்து மூடினார் மைத்ரி. இது, மேன்மேலும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் , மைத்ரிக்கு எதிராக குரல் எழுப்பினார் சபாநாயகர் ஜெயசூர்யா. 

 

இந்த நிலையில், இலங்கை உச்சநீதிமன்றத்தில் எதிர்கட்சிகள் வழக்குகள் தொடர்ந்தன. வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஜனாதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்த நிலையில் நாடாளுமன்றத்தைக் கூட்டினார் சபாநாயகர். மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தார் ராஜபக்சே.

 

நாடாளுமன்றத்தில் பயங்கர கலவரம் வெடித்தது. அதன் பிறகு நடந்த இரண்டு வாக்கெடுப்பின் போதும் பெரும்பான்மையை ராஜபக்சேவால் நிரூபிக்க முடியவில்லை. இதனை மைத்ரிக்கு தெரிவித்த சபாநாயகர், " பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்சேவால் முடியாத நிலையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் வகையில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் "  என வலியுறுத்தியிருந்தார்.  ஆனால், அது குறித்து எந்த முடிவுக்கும் வராத மைத்ரிபால, திடீரென சில தகவல்களை சர்வதேச பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 

 

பத்திரிகையாளர்களிடம் பேசிய மைத்ரி, " ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த போது மிகப் பெரிய ஊழல் மோசடி அவரது ஆட்சியில் நடந்துள்ளது.  அது குறித்து  குழு ஒன்றை அமைத்து விசாரிக்கவிருக்கிறேன். மீண்டும் ரணிலை பிரதமராக நியமிக்கப் போவதில்லை.  ஊழல்கள் அதிகரித்ததால் ரணிலை நீக்க முடிவு செய்த நான்,  சபாநாயகர் ஜெயசூர்யா  வை பிரதமராக நியமிக்க முடிவு செய்தேன். அவர் மறுத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் (ரணில் கட்சி ) மூத்த தலைவர் சஜீத் பிரேமதாசாவை நியமிக்க நினைத்தேன். ஆனால், இருவருமே மறுத்ததால்தான் ராஜபக்சேவை தேர்வு செய்தேன் " என்று கூறியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. மைத்ரியின் இந்த பதில் இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்