
கோவை செட்டிபாளையம் ஈச்சனாரி ரோடு சந்திப்பில் டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளர்களாக லெனின் ராஜ், சரவணன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள மதுக்கடையின் பார் மேலாளராக பணியாற்றி வருபவர் வினோத்.
அவரிடம் லெனின்ராஜூம், சரவணனும் சென்று நாங்கள் கொடுக்கும் மதுபாட்டில்களை விற்பனை செய்து மாதம் 70,000 லஞ்சமாக கொடுத்துவிடு என மிரட்டி இருக்கின்றனர். கடந்த 26-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு வினோத் தகவல் கொடுத்ததின் பேரில், 27-ம் தேதி இரவு ரசாயனம் தடவிய 70,000 ரூபாயை வினோத்திடம் கொடுத்து, லெனின் ராஜ், சரவணன் இருவருக்கும் கொடுக்கச் சொன்னார்கள்.
அதன்படியே வினோத் இருவரிடமும் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் கணேஷ் தலைமையிலான காவல்துறையினர், இருவரையும் கையும் களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும் டாஸ்மாக் கடையில் போலீசார் சோதனை செய்தபோது, கணக்கில் வராத 8,600 ரூபாய் பிடிபட்டது.
‘தைப்பூசம் நாளில் கடை விடுமுறை என்பதால், பாரில் மதுபாட்டில்களைக் கொடுத்து விற்பனை செய்த பணத்தில் இருந்து லஞ்சம் வாங்கிக் கொள்ளலாம்’ என லெனின் ராஜூம், சரவணனும் திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.