Skip to main content

மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது: இல.கணேசன் பேட்டி!

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது: இல.கணேசன் பேட்டி!  

மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. ஆனால், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்த உறவும் இருப்பதாகவோ, நாங்கள் வழிகாட்டுவதாகவோ எனக்குத் தெரிந்து இல்லை என இல.கணேசன் கூறியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

"இந்தியா - சீனா எல்லையில் கடந்த 70 நாட்களாக பதட்டம் இருந்து வந்தது. இந்திய பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, சுமூக நிலை ஏற்பட்டு, இரு தரப்பும் தற்போது படைகளை திரும்பப் பெற்றுள்ளன. போர் புரிந்து வெற்றி பெறுவது போல, போர் நடக்காமல் தடுப்பதையும் வெற்றியாக கருதுகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி கலந்து கொண்டுள்ளது. இன்னும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது. 

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வெங்கய்யநாயுடு, மனோகர் பாரிக்கர் உள்ளிட்டோர் துணை ஜனாதிபதி, கோவா முதல்வர் உள்ளிட்ட பதவிகளை ஏற்றுள்ளதாலும், ஒரு அமைச்சரின் மறைவாலும், மூன்று முக்கிய இலாகாக்களுக்கு அமைச்சர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆளுநர்கள் இல்லாத மாநிலங்களீல் ஆளுநர்களை நியமித்த பின், மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும். அதில் யார், யார் இடம் பெறுவார்கள் என்பது தெரியாது. 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, தமிழக அரசு ஸ்தம்பித்து இருந்த்து. அப்போது, ஆளுநர் சில மாற்று ஏற்பாடுகளைச் செய்த காரணத்தால், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அதிமுகவைப் பொறுத்தவரை இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும்போது, அந்த தலைமைக்கு இணைக்கமாக அதிமுக ஒன்றுபடும் என நினைக்கிறேன். 
 அதிமுக அரசின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. உட்கட்சி பிரச்சினையால் இந்த தேக்கம் ஏற்பட்டு இருக்கலாம். தமிழகத்தில் பொறுப்பு ஆளுநர் இருப்பதால் எந்த வகையிலும் பாதிப்பு இல்லை.

அதிமுகவில் நடக்கும் குழப்பத்திற்கும், பாஜகவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இது பொய்யான ஒரு பிரசாரம். இது அதிமுகவை கொச்சைப்படுத்தும் விவகாரம். ஆனாலும், பாஜகதான் எல்லோரையும் இயக்குவதாகச் சொல்லி, தமிழகத்தில் பாஜக சக்திவாய்ந்த கட்சியாக உருவாகியுள்ளது என்ற எண்ணத்தை எதிர்கட்சிகள் உருவாக்குகின்றனர். அந்த பிரசாரத்தால் பாஜகவிற்கு ஆதரவு பெருகி இருக்கிறது.
மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. ஆனால், பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்த உறவும் இருப்பதாகவோ, நாங்கள் வழிகாட்டுவதாகவோ எனக்குத் தெரிந்து இல்லை. 

உச்சநீதிமன்றம் ஆதார் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தனிமனித சுதந்திரம் என்பது குறித்துத்தான் விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆதார் என்பது ஒழுங்கீனத்தையும், லஞ்ச லாவண்யத்தையும், பொய் கணக்கு எழுதுவதையும் தடுக்கும் ஒரு முயற்சி என்பதால், ஆதார் நீடிக்கும். இதை மத்திய நிதியமைச்சகமும் தெளிவுபடுத்தியுள்ளது. ஒருவரது ஆதார் எண்ணை வெளியில் செல்வதால், எந்த உரிமையும் பாதிக்கப்படாது. மாறாக உரிமை பாதுகாக்கப்படும். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், புழக்கத்தில் இருந்த 92 சதவீத பணம் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துள்ளது. இது பெரிய வெற்றியாகும். இதன் காரணமாக வருமானவரி கட்டக்கூடியவர்களின் எண்ணிக்கை 10 மடங்காக உயர்ந்துள்ளது. அதோடு, கள்ள நோட்டுகளும் மதிப்பிழந்து போயுள்ளது. 

திமுக செயல்தலைவர் ஸ்டாலின், பிரதமரை சந்திக்க வேண்டும் என பத்திரிகையில் அறிக்கை வெளியிட்டால், அதைப்பார்த்து பிரதமர் அவரைக் கூப்பிட மாட்டார். பிரதமர் யாரையும் சந்திப்பதற்கு மறுப்பதில்லை. மாற்றுக்கருத்து கொண்டவர்களைச் சந்திப்பதற்கு அஞ்சவேண்டிய நிலையில் பிரதமர் இல்லை. அதற்காக, யார், யாரெல்லாம் சந்திக்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அவர்களை எல்லாம் சந்திக்க வேண்டிய கட்டாயமும் பிரதருக்கு இல்லை. பிரதமரைச் சந்திக்க வழிமுறை என்ன என்று என்னிடம் கேட்டால், சொல்ல இயலும். முறைப்படி அணுகினால் பிரதமரைச் சந்திக்க முடியும்.

டெல்லியில் போராடுபவர்களை விவசாயிகளின் பிரதிநிதியாக நான் கருதவில்லை. தமிழக விவசாய பிரதிநிதிகள் பிரதமரைச் சந்திக்க விரும்பி கடிதம் கொடுத்தால், நான் ஏற்பாடு செய்ய தயாராக இருக்கிறேன். 

பாஜக மதவாதக் கட்சி என்று திரும்ப, திரும்ப சொல்லி மக்களையும், சிறுபான்மையினரையும் அரசியல் கட்சிகள் ஏமாற்றி ஓட்டுப்பெற்று வருகின்றன. ஆனால், பாஜக தொடர்ந்து வளர்ந்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் எங்களை மதவாதிகளாக கருதவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. மம்தா பானர்ஜி இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து சொல்லி வந்தால், நாங்கள் மேற்குவங்கத்திலும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு ஏற்படும்.

அதிமுக பிரிந்ததற்கும் பாஜகதான் காரணம்; இணைந்ததற்கும் பாஜகதான் காரணம் என்று சொல்கின்றனர். இது முழுக்க முழுக்க அதிமுகவின் உள்கட்சி பிரச்சினை. பாஜகவின் பிண்ணனியில் இருந்தால் அந்த ஆட்சி எந்த இடத்திலும் லஞ்ச, லாவண்யம் இல்லாத அரசாக இருக்கும். அது இல்லாதபோது, அங்கு பாஜகவின் ஆளுமை இருக்கிறது என்ற கருத்துக்கு அர்த்தமில்லை. 
அரசியலில் விமர்சனம் நாகரிகமாக இருக்க வேண்டும். அரசியலில் யாரும் எதிரிகள் அல்ல. தீவிரமாக பேசியவர்கள் மாற்று அணிக்கு போய் விடுகின்றனர். ஆத்திரமில்லாமல், அறிவுப்பூர்வமாக பேச வேண்டும். நாஞ்சில் சம்பத்தின் தவறான பேச்சிற்கு பாஜகவினர் ஜனநாயக பூர்வமாக பதில் தருவார்கள்.

ஆளுநர் என்பவர் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டவர். தமிழக ஆளுநர் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அரசியல் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை பொறுப்பு ஆளுநர் செய்வார். 

மக்கள் மனதில் இப்போது இருக்கும் எண்ணம் என்னவென்றால், அதிமுகவில் மிக அதிகமாக லஞ்ச, லாவண்ய குற்றச்சாட்டுக்கு உட்பட்டு இருப்பது  ஒரு குடும்பம்தான். அந்த குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாத அதிமுக ஆட்சியை தற்போது ஏற்றுக்கொள்ளலாம் என்ற மனநிலை வாக்காளர் மத்தியில் உள்ளது. இப்போது அந்த குற்றச்சாட்டுக்கு உட்பட்டுள்ளதாக சொல்லப்படும் ஒரு நபரோ, ஒரு குடும்பமோ, ஒரு குழுவுக்கோ ஆதரவாக திமுக குரல் கொடுத்தால், கை கொடுத்தால், அதன்படி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தால், ஊழல்மயமான ஒரு குழுவிற்கு திமுக ஆதரவளிக்கிறது என்ற முத்திரை ஏற்படும். ஏற்கனவே, திமுக சில வழக்குகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில், இது தேவைதானா என்று விபரம் தெரிந்த சில திமுக தலைவர்கள் சிந்திப்பார்கள். அந்த குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாத அதிமுகவை ஏற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலை அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்கள் மத்தியில் இருக்கிறது. 

ஆளுகட்சிக்கு எதிராக கமல் போன்றவர்கள் விமர்சிக்கத்தான் செய்வார்கள். ரஜினிகாந்த் அரசியல் வருவது குறித்து எனக்கு தெரியாது.  என்ன முடிவு எடுப்பார் என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.  உட்கட்சி விவகாரத்தில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பின்னணியாக செயல்படுகிறாரா என்று தெரியாது. அவர் எனக்கு நல்ல நண்பர்தான். அவர் காரணமாக இருக்குமானால் அது வேறு மாதிரியாக இருக்கும். அவர் எப்படி சிந்திப்பார் என்பது எனக்குத் தெரியும். அவர் எதைச் சொன்னாலும் பகிரங்கமாக, வெளிப்படையாக சொல்வார். 

பாபா ராம் ரஹீம் அமைப்பு ஒரு ஆன்மிக அமைப்பு என்று கருத முடியாது. அவ்வாறு சொல்வது ஆன்மீகத்திற்கு இழுக்கு. சட்டப்படி அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரசு நடவடிக்கை எடுக்கும். தேர்தல் நேரத்தில் அவர் எங்களுக்கு ஆதரவாளராக காட்டிக் கொண்டாலும், அவர் மீதும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.19 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுகவினர் கொடுத்த மனு மீது சட்டரீதியாக ஆளுநர் விசாரிப்பார்." இவ்வாறு கூறினார். 

ஜீவா தங்கவேல்
 

சார்ந்த செய்திகள்