ரசாயன கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டதையடுத்து கண்களை பாதுகாக்க மாதவரம் பகுதி மக்களுக்கு கண் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாதவரத்தில் உள்ள ரசாயன கிடங்கில் 2- ஆவது நாளாக தொடர்ந்து தீ பற்றி எரிகிறது. ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட ரசாயன கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் பிரகாஷ் கூறுகையில், "மாதவரம் பகுதி மக்கள் கண்களை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். ரசாயனம் கலந்த புகை காற்றில் பரவும் போது கண்ணின் வெளிப்பகுதியை தாக்க வாய்ப்புண்டு. ரசாயன புகையால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டால் மினரல்/ கேன் தண்ணீரால் கழுவ வேண்டும். கண்களைக் கழுவ குழாய் குடிநீரை பயன்படுத்தக்கூடாது. சுட வைத்த நீரில் கண்களை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகும் கண்களில் பிரச்சனை நீடித்தால் கண் மருத்துவரை அணுக வேண்டும். பொதுமக்கள் தாங்களாகவே மருந்துகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது" என்றார்.