இளமை கடந்து முதுமை வந்தாலும் அது தீராது..., அல்ல, அல்ல அமுதசுரபி போல் அது உள்ளம் முழுக்க சொர்க்கத்தின் திறவாய் நீண்டுகொண்டே இருக்கும். பருவத்தில் முளைவிடும் அந்த வேர் மனிதனின் பயணம் வரை விரிந்திருக்கும்.
ஆம் அப்படிப்பட்டது என்ன..? வேறென்ன காதல்தானே...காதல் ஒன்றே அன்பை தழுவி மனித ஆற்றலை உயிர்பித்து வருகிறது. இந்த காதல் உயிரினம் அனைத்திற்கும் பொதுவானது தான். எப்படி ஒரு நாட்டுக்கு தேசியக்கொடி இருக்கிறதோ, அதுபோல்தான் உலகம் முழுக்க காதல் என்றால் காதலர் அதன் சின்னமாக இருப்பது இதயம்தான்.
இந்த இதயத்தை வைத்து காதல் கவிதைகள், காதல் பாடல்கள் உலகம் முழுக்க எத்தனையோ ஆளுமைகள் வர்ணித்து பதிவு செய்து கொண்டே வருகிறார்கள். அப்படிப்பட்ட இந்த காதலுக்கு ஒரு நாளை காதலர் தினமாக உலக சமுதாயம் அறிவித்து கொண்டாடி வருகிறது.
அந்த நாள் தான் பிப்ரவரி 14, காதலர் தினம். இந்த நாளில் புதிதாய் காதலிப்பவர்கள் தங்களுக்கான பரிசுகளை கொடுத்து மகிழ்வார்கள். அதேபோல் காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருப்பவர்களும் காதல் பரிசுகளை பரிமாறிக் கொள்வார்கள். அதில் குறிப்பிடத் தகுந்த மாதிரி பரிசு என்றால் இதயம் பொறித்த பொருள்கள் தான்.
அப்படிப்பட்ட ஒரு பொருள் ஈரோட்டில் விற்பனைக்கு குவிந்துள்ளது. இதயம் வடிவிலான பொம்மைகள் ஏராளமாக பல கடைகளில் விற்பனைக்கு இறங்கியுள்ளது. பல வண்ணங்களில் இருக்கும் அந்த இதய வடிவிலான பொருள் காதலர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் காதலினால் பெருமை கொண்டு வாழும் இனைகள் ஏராளமாக இருக்கத்தான் செய்கிறது. மறுபுறம் காதலினால் மணம் கொண்டு பிறகு அது சுமையாகி சலிப்பு என்ற குரல்களும் குடும்பஸ்தர்கள் மத்தியில் இல்லாமலும் இல்லை...எப்படி இருந்தாலும் காதல்.... காதல்.... காதல்....., மனித இனத்தின் மகத்துவம் தான்....!