Skip to main content

“பயந்தது உண்மைதான்; நாய் சிங்கமாகாது” - மாறி மாறி மோதிக்கொள்ளும் ஆர்.பி, Vs டி.டி.வி

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
''The fear is true; You are a dog''-R.P., T.T.V

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரனின் அமுமுக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்  தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.  இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே  உரசல் போக்கு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''ஜெயலலிதா இருந்த வரைக்கும் உங்களை பார்த்து நாங்கள் பயந்தது உண்மைதான். அது சத்தியம் தான். இப்பெல்லாம் நீங்கள் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் புழு கூட பயப்படாது. அதிமுகவினுடைய தொண்டன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான். அதனால் உங்களிடம் இருந்து விடை பெற்று இந்த இயக்கமும், இயக்கத் தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இந்த பூச்சாண்டி காட்டுவது, நையாண்டி செய்வது அதெல்லாம் ஜெயலலிதா இருக்கும் வரை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. உண்மைதான் உங்கள் வீட்டுக்கு நாங்கள் காவல் நாயாகவும் இருந்திருக்கிறோம். அதே நேரத்தில் இப்பொழுது நீங்கள் எங்களை சீண்டி பார்த்தீர்கள் என்றால் அதிமுகவின் இரண்டு கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறோம்'' எனத் தெரிவித்திருந்தார்.

ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு டி.டி.வி.தினகரன் பதிலளித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''நாய் என்னைக்கும் சிங்கமாகாது. நாய் ஓநாயாகத்தான் மாறும் சிங்கமாக மாறாது. வீட்டுக்கு காவலாளியாக இருந்தோம் என்று சொல்கிறார். எங்க வீட்டுக்கு காவலாளி எங்கள் வீட்டில் இன்னமும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நன்றியோடு இருப்பார்கள். இவர்களெல்லாம் நன்றி இல்லாதவர்கள். துரோக சிந்தனை உள்ளவர்கள்''என்றார்.

சார்ந்த செய்திகள்