கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற அவரது சடலத்தின் முன் மகன் திருமணம் செய்து கொண்ட செயல் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யம்மாள். இவரது கணவர் ராஜேந்திரன் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த 19 ஆம் தேதி காலமானார். ராஜேந்திரன் மகன் பிரவீனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு மார்ச் 27 ஆம் தேதி நடைபெற இருந்தது. ராஜேந்திரனின் எதிர்பாராத இந்த மரணத்தினால், தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது சடலத்தின் முன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை பிரவீன் திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் செய்ய இருக்கும் மணமகனின் தந்தை காலமானதைத் தொடர்ந்து இறப்பு நிகழ்ச்சிக்கு வந்த மணப்பெண் சொர்ணமால்யா, தந்தையை இழந்த நிலையில் இருந்த பிரவீனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் உடனடியாக இருவரும் திருமணக் கோலத்திற்கு மாறி தந்தையின் சடலத்தின் முன் திருமணம் செய்து கொண்டனர். நண்பர்களின் விசில் சத்தம், உறவினர்களின் கைத்தட்டல் எனத் திருமணம் நடைபெற்றது. தந்தையை இழந்த மகனின் இச்செயலால் அந்த கிராம மக்கள் உருக்கத்தோடும் நெகிழ்ச்சியோடும் காணப்படுகின்றனர்.