சேலம் அருகே, பெற்ற மகள்கள் என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வசிப்பவர் கோவிந்தன். இவருடைய மகன் கண்ணன் (40) கட்டடத் தொழிலாளி. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுகன்யா (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 மற்றும் 4 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகளும் 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சுகன்யாவுக்கு, சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவரை பிரிந்த சுகன்யா, தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அந்த வாலிபருடன் ஒன்றாக வாழத் தொடங்கினார்.
கடந்த 20 நாள்களுக்கு முன்பு, அம்மாபேட்டையில் உள்ள சுகன்யாவின் வீட்டுக்குச் சென்ற கண்ணன், அங்கிருந்த தனது மூன்று குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், கடந்த 5 நாள்களுக்கு முன்பு மகனை மட்டும் சுகன்யாவிடம் விட்டுவிட்டு, மகள்கள் இருவரையும் தன்னுடனேயே வைத்துக் கொண்டார். இந்நிலையில், மார்ச் 28 ஆம் தேதி 9 வயதான மூத்த மகள் அழுதுகொண்டே பக்கத்தில் வசிக்கும் பெரியம்மா நல்லம்மாளின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். சிறுமியிடம் நல்லம்மாள் விசாரித்தபோது, அப்பா கண்ணன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவலை கூறியிருக்கிறாள். தன் தங்கையிடமும் அதேபோல் தவறாக நடந்து கொண்டதாகவும் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நல்லம்மாள், இதுகுறித்து காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் வாழப்பாடி மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
காவல் ஆய்வாளர் தனலட்சுமி, கண்ணனை அழைத்து விசாரித்தார். சிறுமிகளிடமும் விசாரணை நடந்தது. இதில், பெற்ற மகள்கள் என்றும் பாராமல் அவர்களிடம் மாறி மாறி பாலியல் பலாத்காரத்தில் கண்ணன் ஈடுபட்டது தெரிய வந்தது. போதிய உணவு கொடுக்காமல் பெண் குழந்தைகளை பட்டினி போட்டு சித்திரவதை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டு, சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பெற்ற மகள்களை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.