Skip to main content

நீதிமன்றத்தின் வெளியே மகனை வெட்டி கொன்ற தந்தை! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Father and had conflict son passed away police arrested his father
காசிராஜன்

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் சுந்தரலிங்க நகரைச் சேர்ந்த தமிழழகன் என்பவர் நில புரோக்கர். இவரது மகன் காசிராஜன் (30) சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்பவர். இவரது மனைவியிடம் தந்தை தமிழழகன் தவறாக நடந்ததாக 2020ல் ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் வழக்காகி, தற்போது தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

 

இந்த விவகாரம் காரணமாக தந்தை மகனுக்குள் பகைமை மூண்டிருக்கிறது. அடிக்கடி காசிராஜன் தன் தந்தையைத் தாக்க முயன்றிருக்கிறார். இதன் காரணமாக தமிழழகன் மகன் காசிராஜனுக்கு சொத்துக்களை தரவில்லை. இந்நிலையில் கடந்த ஏப். 10ம் தேதியன்று காசிராஜனின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழலில் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிற வழக்கின் பொருட்டு ஆஜராகுவதற்காக தமிழழகன் தன் உறவினர்களான கடல்ராஜா, மற்றும் காசிதுரை ஆகியோருடன் நேற்று தூத்துக்குடி கோர்ட்டிற்கு வந்திருக்கிறார். தாங்கள் வந்த காரை கோர்ட் எதிரேயுள்ள தெருவில் நிறுத்தியுள்ளனர்.

 

Father and had conflict son passed away police arrested his father
தமிழழகன்

 

பின்பு கோர்ட்டில் ஆஐராகிவிட்டு வீடு திரும்புவதற்காக காரில் ஏற முயன்ற தந்தை தமிழழகனை காசிராஜன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்ற போது அவர்கள் வாகனத்தால் காசிராஜன் மீது மோதி விட்டுத் தப்பிச் செல்ல முயன்றனர். உடனே சுதாரித்த, காசிராஜன் தந்தை தமிழழகனை வெட்டியிருக்கிறார். பதறிப் போய் தடுத்த உறவினர்கள் காசிதுரைக்கும் கடல்ராஜாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.


அடுத்த நொடி சுதாரித்துக் கொண்ட மூன்று பேரும் காசிராஜனைத் திருப்பித்தாக்கினர். அவரை தெருவில் விரட்டிச் சென்ற மூன்று பேரும் தாக்கினர். காசிராஜன் கையிலிருந்த அரிவாளைப் பறித்தவர்கள் அவரைப் பட்டப்பகல் வீதியில் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார் காசிராஜன். பட்டப் பகலில் நடந்த இந்த பயங்கரத்தால் பொது மக்கள் அலறிச் சிதறி ஓடினார்கள்.


தமிழழகன் உட்பட காயமடைந்த மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த எஸ்.பி.பாலஜி சரவணன், ஏ.எஸ்.பி. சந்தீஸ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தியதோடு உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். அத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மகனை கொலை செய்ததாக தந்தை தமிழழகன், உறவினர்களான கடல் ராஜா காசிதுரை மூவரையும் கைது செய்த போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பட்டப்பகலில் நீதிமன்றம் பகுதியில் நடந்த இந்தப் பயங்கரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்