வாய்க்கால்கள் தூர்வாராப்படாததால் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப்பகுதிகளுக்கு வந்துசேரவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி பேசும்போது: ஆவுடையார்கோவில் தாலுகாவில் 2017-18-ஆம் ஆண்டுக்கு பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆவுடையாhர்கோவில் தாலுகாவில் 3822 ஹெக்டேர்தான் மொத்த விவசாய நிலப்பரப்பு. ஆனால், 5274 ஹெக்டேருக்கு பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஏம்பல் பிர்காவில் 3500 ஏக்கரும், மீமிசல் பிர்காவில் 684 ஏக்கரும், பொன்பேத்தியில் 1262 ஏக்கரும் கூடுதலாக பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதோ மோசடி நடப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த ஆட்சியர், அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப்பகுதிகளுக்கு வந்துசேரவில்லை. கடலில் கலந்து நீர் விணாகிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் உடனடியாக வாய்க்கால்களை தூர்வரா நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை இந்தப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். உபரிநீர் கடலில் கலப்பதைத் தடுத்து பாசனத்திற்குப் பயன்படுத்துவதே காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தின் பிரதான நோக்கம். ஆனால், வழக்கம் போல இந்த ஆண்டும் கடலில் தண்ணீர் வீணாகிறது. எனவே, திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் உபரிநீர்த்திட்டம் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
கறம்பக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் தலையிட்டு சீரான மின் வினியோத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்துசெல்லும் திங்கள் கிழமை மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கம் கூட்ட நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனப் பேசினார். வரும் நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன் பேசும்போது: ஆவுடையார்கோவில் தாலுகா இலங்குடி கிராமத்தில் குறைவான மின் அழுத்தத்தை போக்கும் வகையில் கூடுதல் மின்மாற்றி அமைத்திட வேண்டும். எழுநூற்றுமங்களம், அரசூர் பாசன ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆவுடையார் கோவில் வெள்ளாற்றில் நடைபெறும் மணல்கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். பதிலளித்த ஆட்சியர், ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.
விவசாயி சொக்கலிங்கம் பேசும்போது: அறந்தாங்கி தாலுகா பூவரக்குடி வரிசாக்குளத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வனத்துறையின் சார்பில் நட்டு வளர்க்கப்பட்டுள்ள யூக்கலிப்பிட்டஸ் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்திலேயே வனத்துறை அதிகாரிகளை அழைத்து கண்டித்த ஆட்சியர் உடனடியாக அப்புறப்படுத்தவில்லை என்றால் வட்டரா வளர்ச்சி அலுவலர் மரங்களை அப்புறப்படுத்தப்படும் என்றார்.