
கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது செங்கமேடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் சம்பத்(58). இவர் விவசாயப் பணிகளுக்காக உழவு செய்யப் பயன்படும் மினி டிராக்டர் ஒன்றை ரூ.2 லட்சம் கொடுத்து புதிதாக விலைக்கு வாங்கியுள்ளார். தற்போது வெலிங்டன் ஏரியிலிருந்து விவசாயத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகள் உழவு செய்து, நெல் நடவு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளனர்.
அந்தவகையில் சம்பத் அந்த டிராக்டரைக் கொண்டு தனது நிலத்தில் நெல் நடவு செய்வதற்கான பணியில் தினசரி ஈடுபட்டு வந்தார். உழவு வேலை முடிந்ததும் மறுநாள் உழவு பணிக்காக ஆவினங்குடி - வையங்குடி செல்லும் சாலையின் அருகில் சிரை மீட்ட அய்யனார் கோயில் அருகே உள்ள தனது நிலத்தில் சம்பவத்தன்று சம்பத் தனது டிராக்டரை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்நிலையில் அடுத்த நாள் வந்து பார்க்கும்போது, அந்த இடத்தில் ட்ராக்டர் இல்லை. இதனால் சந்தேகமடைந்த சம்பத் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளிடம் விசாரித்தபோது, அன்று இரவு மர்ம நபர் சிலர் ட்ரக்டரை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சம்பத் ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விவசாய டிராக்டரைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.