பவானிசாகர் அணையில் இருந்து கடந்த அக்.,5 ம் தேதி கீழ்பவானி இரண்டாம் மண்டலம், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் ஆகிய பாசனங்களில் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கீழ்பவானி வாய்க்கால் முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால், முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு மவுனம் காத்து வந்ததால், கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவிந்து முறையிட்டனர். அதைத்தொடர்ந்து கூட்டமைப்பு நிர்வாக குழு கூட்டம் நடத்தி, காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருந்தது. இதனால், இன்று ஈரோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தின் முன் நின்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. போராட்டம் குறித்து கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "பவானிசாகர் அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இப்பகுதியில் எள், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கிறோம். வாய்க்காலில் தண்ணீர் திறந்தால் ஒரு முறையாவது சாகுபடி பணியை நிறைவு செய்வோம். ஆனால், வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் முதலாம் மண்டலத்திற்கு தண்ணீர் திறப்பு அறிவிக்க வேண்டும்; இல்லை என்றால் கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகளை திரட்டி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவது என அறிவித்தோம். அரசு தரப்பிலிருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் அனைவரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் " என்றனர்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் தண்ணீர் திறப்பு பற்றி அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி கொடுத்ததால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
- ஜீவாதங்கவேல்