புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக நெல்லுக்கு அடுத்தது தென்னை இருந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேங்காய் மற்றும் தென்னை உற்பத்தி பொருட்கள் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. ஆனால், கஜா புயலுக்கு பிறகு அந்த ஏற்றுமதிகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தென்னை விவசாயத்தை நம்பியுள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தங்கள் விவசாயத்தை மீட்க அவர்கள் கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்டமுடியாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில் தேங்காய், கொப்பரை விலை குறைந்து மேலும் அவர்களை பொருளாதார ரீதியாக பாதித்துள்ளது.
இதன் காரணமாக டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகள், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் கடந்த மாதம் போராட்டத்தைத் துவங்கினர். தற்போது இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தென்னை விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். கீரமங்கலம் மெய்நின்றநாத சுவாமி ஆலயத்திலிருந்து தேங்காய்களுடன் ஊர்வலமாக வந்த விவசாயிகள் பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கணக்கான தேங்காய்களை சாலையில் உடைத்துப் போராடினர்.
இந்தப் போராட்டத்தில், உரித்த தேங்காய் கிலோ ரூ.50க்கும் கொப்பரை கிலோ ரூ.150க்கும் கொள்முதல் செய்ய வேண்டும். பள்ளிகளில், ரேசன் கடைகளில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆயில்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்களை பயன்படுத்த மத்திய மாநில உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் தலைமையில் செல்வராஜ், நக்கீரர் தென்ன உற்பத்தியாளர் நிறுவனம் காமராஜ், சுந்தராசு ஆகியோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.