திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒயாமரி சுடுகாட்டில் பிணம் போல் படுத்து விவசாயிகள் அதிரடி நடத்தி போலிசரை அதிர்ச்சியடைய வைத்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பிணம் போல் படுத்து நூதன போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண் வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், மற்றும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் திருச்சியில் உள்ள ஓயாமரி சுடுகாட்டில் அய்யாக்கண்ணு உள்பட 11 பேர் விறகு மூலம் பிணங்கள் எரிக்கப்படும் இடத்தின் அருகில் படுத்து போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மேல் சட்டை அணியாமல் வேட்டி மட்டும் அணிந்து, கழுத்தில் மாலையுடன் பிணம் போல் படுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த கோட்டை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அய்யாக்கண்ணு உள்பட 11 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, மத்திய மோடி அரசு விவசாயிகளை பிணம் போல் ஆக்கி விட்டது. இதை உணர்த்தவே சுடுகாட்டில் பிணம் போல் படுத்து போராட்டம் நடத்தினோம். வரும் மே 3ம் தேதிக்குள் காவிரி மேலாண் வாரியம் அமைக்காவிட்டால், டெல்லி சென்று பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். அப்போது பிரதமர் வீட்டின் முன் தூக்கில் தொங்கும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.