ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சூரியம்பாளையம் கிராமம் அடுத்த சொட்டையம்பாளையம் கரும்புக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ‘எங்கள் கிராமத்தில் சுமார் 90 ஏக்கர் அளவில் விவசாய நிலம் உள்ளது. இங்கு சுமார் 30 குடும்பங்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளைப் பராமரித்து வளர்த்து வருகிறோம். எங்கள் நிலத்திற்கு பொதுப் பாதை எதுவும் இல்லை. எங்கள் நிலங்களின் அருகில் தொழிற்சாலை இயங்கி வருகின்றன. அந்த நிறுவனத்தின் 30 அடி பாதை வழியாகத்தான் இதுவரை சென்று கொண்டிருந்தோம்.
தற்போது தொழில் நிறுவனத்தினர் அந்தப் பாதையைக் கம்பி வேலி போட்டு அடைத்துவிட்டனர். அதனால் எங்களது விவசாயத்திற்குத் தேவையான பொருட்கள், உற்பத்தி பொருட்கள் வெளியே கொண்டு செல்லவும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று வரவும் குடிநீர் எடுத்து வருவதற்கும் அவசரகால மருத்துவர் உதவிக்கு சென்று வருதல் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பாதை இல்லாத காரணத்தால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்கள் பகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து போக்குவரத்துக்கு உதவி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.