புவனகிரி அருகே சேத்தியாதோப்பு, சக்திவிளாகம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் சிறிய ரக சரக்கு வண்டியில் பிரபல தனியார் உர கம்பெனியின் பெயரில் ஏராளமான உர மூட்டைகளை எடுத்து வந்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் சக்தி வாய்ந்த இயற்கை உரம் எனக்கூறி விற்பனை செய்துள்ளனர். இதனை நம்பி அப்பகுதியில் தற்போது குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள 5க்கும் மேற்பட்ட விவசாயிகள் உரத்தை வாங்கியுள்ளனர்.
அப்போது சில விவசாயிகள் இது மண் உருண்டைகள் போல் உள்ளதே எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் இது இயற்கை உரம் இதனை நெற்பயிருக்கு போடும்போது அதிகபட்சமாக விளைச்சல் இருக்கும் என ஆசை வார்த்தை கூறி ஒரு மூட்டை உரம் ரூ.1150 விற்பனை செய்துள்ளனர். இதில் திருப்தி அடையாத விவசாயிகள் விற்பனை செய்து விட்டு சென்ற ஒரு மணி நேரம் கழித்து விவசாயிகள் அந்த உரத்தை எடுத்து கையால் நுணுக்கி உள்ளனர். அப்போது வெறும் மண்ணாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள 5-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து விட்டோம் எனக் கருதி அதிர்ச்சியில் வேதனை அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து கீரப்பாளையம் வட்டார வேளாண் துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து சம்பந்தபட்ட இடத்திற்கு வந்த வேளாண் துறை அலுவலர்கள் அந்த உரத்தை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து வேளாண் துறை உதவி இயக்குநர் அமிர்தராஜ் கூறுகையில் கீரப்பாளையம் வட்டாரத்தில் 2500 ஹெக்டர் பரப்பளவிற்கு குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது என்றும் இதற்கு தேவையான உரங்கள் அங்கீகரிக்கப்பட்ட தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இங்கு முறையாக சென்று விவசாயிகள் உரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். உரம் விற்பனை செய்து விட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கிராமங்களுக்கு நேரடியாக வந்து சிலர் உரங்களை விற்பனை செய்தால் வாங்கி ஏமாற வேண்டாம். அப்படி உரம் விற்பனை செய்தால் அவர்கள் குறித்து உடனடியாக வேளாண்துறை அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். அதேபோல் சேத்தியாதோப்பு, கம்மாபுரம் புவனகிரி சுற்று வட்டார பகுதிகளில் இவர்கள் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நன்கு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.