Published on 30/04/2020 | Edited on 30/04/2020
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், சின்னவேப்பம்பட்டு சின்னகல்லுப்பள்ளியில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் காலி மைதானத்தை மொத்த காய்கறி மார்க்கெட் பகுதியாக மாற்றியுள்ளது மாவட்ட நிர்வாகம். இந்த மார்க்கெட் பகுதிக்கு தினமும் விடியற்காலை 3 மணிக்கெல்லாம் விவசாயிகள் தங்களது விலை பொருட்களை மொத்தமாக விற்பனை செய்ய கொண்டு வந்துவிடுகின்றனர்.
அதனை வாங்கும் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகளும் அங்கு வருகின்றனர். அப்படி வருபவர்களுக்கு நோய் பரிசோதனை செய்ய வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பசுபதி தலைமையில் ஒரு மருத்துவ குழு தினமும் விடியற்காலை 3 மணிக்கே அந்த தனியார் மருத்துவக்கல்லூரிக்கு வந்துவிடுகிறது.
அவர்கள் அந்த வளாகத்தில் நுழையும் வியாபாரிகள், விவசாயிகள் என அனைவரையும் பரிசோதனை செய்தபின்பே உள்ளே அனுப்புகின்றனர். கடந்த ஏப்ரல் 30ந்தேதி விடியற்காலை 200 பேருக்கு நோய் கண்டறியும் சோதனை நடத்தினர். இவர்களோடு வருவாய்த்துறை, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
அந்த விடியற்காலை நேரத்தில் வரும் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கும் மேற்பட்டோர் முககவசம்கூட அணியாமல் வருவது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.