தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திருவண்ணாமலை வருகையைக் கண்டித்து செப்டம்பர் 9 ஆம் தேதி 'எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க' விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முதல்வர் பழனிசாமியின் திருவண்ணாமலை வருகையைக் கண்டித்து சேத்துப்பட்டு வட்டம், ஆத்துரை கிராமத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கறுப்புக் கொடி ஏந்தி தங்களது பகுதியில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தினர் பேசியபோது, "எட்டு வழிச்சாலை எனும் விவசாயிகள் அழிவுப் பாதை திட்டத்தை அறிவித்ததன் மூலம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வருகை 'எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயி'களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து போராடும் விவசாயிகளின் போராட்டத்தைக் கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை முதல்வர். இது விவசாயிகளை மதிக்காத முதல்வர் என்பதையே காட்டுகிறது" எனப் பேசினர்.