முல்லைப் பெரியாறு அணையை அகற்றவேண்டும் என்று கோரி கேரள மாநிலத்தில் மோட்டார் பைக் வாகன பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பேரணிக்கு அனுமதி தரக்கூடாது என்று பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாயிகள் மத்திய அரசு கோரிக்கை வைத்தனர். தமிழக கேரள எல்லையை முற்றுகையிட்டுப் போராடுவோம் என்று அறிவிப்பு செய்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த ஐந்து மாவட்ட விவசாயிகளை, உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் குமுளிக்கு விவசாயிகள் செல்வதற்கு அனுமதி மறுத்தனர். ஆனால் சாலை மறியல் செய்வதற்கு அனுமதி தாருங்கள், கேரளாவில் வாகன பேரணி சென்று கொண்டிருக்கிறது என்று கோரிக்கை வைத்தனர்.
இதனால் விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பென்னிகுயிக் மண்டபம் செல்லும் வழியில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.போராட்டம் எதிரொலியாக குமுளி லோயர்கேம்ப் மலைச் சாலையில் இருபுறமும் போக்குவரத்து தடைப்பட்டு வாகனங்கள் வரிசையாக நின்றன. 5 மாவட்ட விவசாயச் சங்கத் தலைவர் எஸ்.ஆர். தேவர் ஏ.எஸ்.பி.யிடம் மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன் பின்னர் வட்டாட்சியர் அர்ஜுனன், துணை வட்டாட்சியர் சுருளி ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விவசாயியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்குத் தெரியப்படுத்துவோம் என்று கூறினார்.
அதன்பேரில் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு சென்றனர். இந்த எல்லை முற்றுகை போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் செ. நல்லசமி, 5 மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பொ.பொன்.கட்சி கண்ணன், சலேத்துராஜ், ச.அன்வர் பாலசிங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வழக்கறிஞர் ஈசன், மாவட்ட தலைவர் ஜெ.பொன்னுத்துரை உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான விவசாயிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் தமிழக, கேரளா எல்லையில் போக்குவரத்து தடைபட்டது. லோயர் கேம்பில் இருந்து கேரளா செல்லும் சாலை போலீசாரால் மூடப்பட்டது.