Skip to main content

மத்திய ஆசிரியர் தேர்வு: தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை நீக்கி இந்தியை திணிப்பதா? அன்புமணி இராமதாஸ் கேள்வி

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

மத்திய ஆசிரியர் தேர்வு: தமிழ் உள்ளிட்ட 17 மொழிகளை நீக்கி இந்தியை திணிப்பதா? என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மொழி வாய்ப்புகள் பட்டியலில் இருந்து தமிழ் உள்ளிட்ட 17 மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் கண்டிக்கத்தக்கது.
 

தமிழக அரசுக்கு சொந்தமான பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவதைப் போலவே, கேந்திரிய வித்தியாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளிலும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் பல்வேறு மாநிலங்களின் அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்களாக பணியில் சேர முடியும். மொத்தம் இரு தாள்களைக் கொண்ட இத்தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒன்று முதல் ஐந்து வரையிலான தொடக்க நிலை வகுப்புகளுக்கும், இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள் நடுநிலை வகுப்புகளுக்கும் ஆசிரியராக பணியில் சேர தகுதி பெற முடியும். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில்  இரு மொழிப் பாடங்கள் உட்பட மொத்தம் 5 பிரிவுகளில் இருந்து தலா 30 மதிப்பெண்களுக்கு வினா எழுப்பப்படும். 90 மதிப்பெண்களுக்கும் கூடுதலாக பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

 

மொழிப்பாடங்களைப் பொறுத்தவரை எட்டாவது அட்டவணையில் உள்ள 22 இந்திய மொழிகளில் 19 மொழிகள் மற்றும் ஆங்கிலம் என மொத்தம் 20 மொழிகளில் இருந்து ஏதேனும் இரு  மொழிகளை தேர்ந்தெடுத்து இத்தேர்வுகளில் பங்கேற்க முடியும். வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்  முதலாவது மொழியாக ஆங்கிலத்தையும், இரண்டாவது மொழியாக தமிழையும் தேர்வு செய்து வந்தனர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களின் தாய்மொழியுடன் ஆங்கில மொழியை தேர்ந்தெடுத்து   இத்தேர்வுகளை எழுதி வந்தனர். ஆனால், இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளை இந்தப் பட்டியலில் இருந்து நீக்கி விட்ட சி.பி.எஸ்.இ கல்வி வாரியம், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய 3 மொழிகளில் ஏதேனும் இரு மொழிகளை தேர்ந்தெடுத்து அவற்றில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. இது இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என்பது ஒருபுறமிருக்க, தமிழ் மொழி பேசும் மக்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் சதியுமாகும்.
 


 

Does 17 languages, including Tamil, impose Hindi?


 

சி.பி.எஸ்.இ நடைமுறைப்படுத்தியுள்ள புதிய விதிகளின்படி, தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் எவரும் தங்கள் தாய்மொழியைத் தேர்வு செய்து தேர்வெழுத முடியாது. இரு மொழிப்பாடங்களில் ஒன்றில் மட்டுமே ஆங்கிலத்தை தேர்வு செய்து எழுத முடியும். இந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இரண்டாம் தாளை எழுத முடியாது என்பதால் அதற்குரிய 30 மதிப்பெண்களை இழப்பார்கள். அதேநேரத்தில் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்  தங்கள் தாய்மொழியில் தேர்வெழுதி அதற்குரிய 30 மதிப்பெண்களை எளிதாக எடுத்து விடுவார்கள். அத்தகைய சூழலில் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 150&க்கு 90 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெறும் நிலையில், தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 120&க்கு 90 மதிப்பெண்களை எடுத்தால் தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டு விடும்.
 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14,15,16 உள்ளிட்ட பிரிவுகள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப் படுவதை உறுதி செய்கின்றன. ஆனால், சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் புதிய நிலைப்பாடு இந்தப் பிரிவுகளுக்கு எதிரானது ஆகும். அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள வாய்ப்புகளை மத்திய அரசும், மத்திய இடைநிலை கல்வி வாரியமும் திட்டமிட்டு பறிப்பதை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்க முடியாது. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மொழி வாய்ப்புப் பட்டியலில் இருந்து இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றைத் தவிர மற்ற மாநில மொழிகளை நீக்கி விட்டால், அந்த மாநில மொழிகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் வேறு வழியின்றி இந்தி அல்லது சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் மத்திய அரசு இவ்வாறு செய்துள்ளது. இது கொடூரமான மொழித் திணிப்பாகும்.
 

மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற நாளிலிருந்தே இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கான முயற்சிகள் பலவழிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில், மத்திய அரசுப் பணி தேவை என்றால் இந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயம் தேவை  என்ற நிலையை ஏற்படுத்த மத்திய அரசுத் துடிக்கிறது. அதன்காரணமாகவே கடந்த மாதம் வெளியிடப்பட்ட  இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வேலைவாய்ப்புகளுக்கு இந்தி கட்டாயம் என்று அறிவித்த மத்திய அரசு, இப்போது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இந்தி அல்லது சமஸ்கிருதத்தை கட்டாயமாக்கியுள்ளது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும்.
 

எனவே, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மொழிப்பாட வாய்ப்புப் பட்டியலில் தமிழ் உள்ளிட்ட ஏற்கனவே இருந்த 20 மொழிகளும் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி & சமஸ்கிருத எதிர்ப்பு போராட்டங்கள் பெரிய அளவில் வெடிப்பதை தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



 

சார்ந்த செய்திகள்