தஞ்சாவூரில் இருந்து கல்லணைக் கால்வாயில் தடுப்புச்சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக தொடங்கி நடந்து வருகிறது. கரை ஓரங்களில் தடுப்புச் சுவர்கள் அமைப்பதால் கடை உடைப்புகள் தடுக்கப்படும். ஆனால் ஆற்றின் தரை தளத்தில் நிலத்தடி நீரை பாதிக்கும் வகையில் தரைதளத்தையும் கான்கிரீட் போட்டு மூடுவதால் நிலத்தடி நீர் குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
தற்போது, புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு முதல் நெய்வத்தளி, ஆயிங்குடி, வல்லவாரி, அரசர்குளம், நாகுடி வழியாக கல்லணை கால்வாய் முடிவடையும் மும்பாலை ஏரி வரை கான்கிரீட் தளம் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளும், பாலங்கள், தண்ணீர் திறப்புகள் அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளது. முதல்கட்டமாக சுமார் 7.5 கீ.மீ தூரத்திற்கான பணிகள் நடக்கிறது.
இந்த நிலையில் மேற்பனைக்காடு பகுதி விவசாயிகள் கூறும் போது, “புதுக்கோட்டை மாவட்டம் முழுமையாக நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் பூமியாக உள்ளது. நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து எங்கள் ஊருக்கு மேற்கில் சுமார் 15 கி மீ தூரத்தில் உள்ள கொத்தமங்கலம், வடகாடு, மறமடக்கி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 1000 அடிக்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்கின்றனர். ஆனால் கல்லணை கால்வாய் ஓடும் மேற்பனைக்காடு உள்ளிட்ட ஆற்றுப்படுகையில் உள்ள கிராமங்களில் மட்டும் சுமார் 200 அடிக்குள் நிலத்தடி நீர் உள்ளது. காரணம் 6 மாதம் கல்லணைக்கால்வாயில் தண்ணீர் வருவதால் நிலத்தடி நீரும் சேமிக்கப்பட்டது.
இப்படியான நிலையில் தற்போது தடுப்புச்சுவர் அமைப்பதுடன் தரைதளத்திலும் கான்கிரீட் போடுவதால் நிலத்தடியில் நீர் இறங்காமல் ஆற்றுப்படுகையில் உள்ள எங்கள் கிராமங்களிலும் நிலத்தடி நீர் குறைந்து போகும் அபாயம் உள்ளது. ஆனால் நிலத்தடி நீரை சேமிக்க ஆங்காங்கே 2 அங்குல அளவில் சின்ன சின்ன குழாய்கள் புதைத்திருக்கிறார்கள். அந்தக் குழாய்களில் உள்ளே போகும் தண்ணீர் எப்படி நிலத்தடி நீரை பாதுகாக்கும்? மேலும் பாலங்கள் உடைக்கும் கான்கிரீட் கழிவுகளை குளங்களுக்குள் கொட்டி வருகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர்.
இந்த நிலையில் மேற்பனைக்காடு கிராமத்தில் பணிகள் நடப்பதை ஆய்வு செய்ய வந்த பொதுப்பணித்துறை எஸ்டிஓ இளங்கண்ணனிடம் விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்ட போது அவர் நம்மிடம், “கல்லணை கால்வாய் முழுமையாக பணிகள் நடக்கிறது. தண்ணீர் வீணாவதை தடுக்கவும், கரை உடைப்புகளை தடுக்கவும் கான்கிரீட் சுவர், தளம் அமைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் குறையும் என்று சொல்ல முடியாது. 8 மீ இடைவெளியில் ஆழமாக குழாய்கள் பதிக்கிறோம். இதன் மூலம் தண்ணீர் வரும் காலத்தில் பூமிக்குள் தண்ணீர் போகும். இந்த குழாய்கள் மூலம் தண்ணீர் உள்ளே இறங்குவது நமக்கு தெரியாமலேயே நடக்கும்” என்றார்.