தஞ்சாவூரில் அரசு திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்ட பொழுது ஊராட்சி மன்றத் தலைவரின் காலணிகளை விவசாயி ஒருவர் கையில் தூக்கி வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றுக்கான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் தன்னுடைய காலணியை நூலகத்தில் விட்டுவிட்டதாகக் கூறி விவசாயி ஒருவரிடம் காலணியை எடுத்து வருமாறு தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற விவசாயி அவருடைய காலணியை கைகளால் எடுத்து வந்து அவருடைய காலடியில் போட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வில் இருக்கும் பொழுதே நடந்த இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.