திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வாரப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். விவசாயியான இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சொந்த பணி காரணமாக காப்பிலியபட்டிக்கு வருகை தந்துள்ளார். பின்னர் தனது பணிகளை முடித்துக் கொண்டு கல்வாரப்பட்டிக்கு திருப்பிக் கொண்டிருந்துள்ளார்.
இவர் மா.மு. கோவிலூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் இருந்த தேன் கூடு கலைந்து ஏராளமான மலைத் தேனீக்கள் வெளியேறியுள்ளன. இந்த தேனீக்கள் சாலையில் சென்று கொண்டிருந்த விவசாயி காளியப்பனை கொட்டியுள்ளன. இதனால் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அவ்வழியே சாலையில் சென்று கொண்டிருந்தவர்களையும் தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால் 8க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலூகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மலை தேனீக்கள் கொட்டியதில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.