கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியிலுள்ள 200 விவசாயிகளுக்கு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரான தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது 84, 85-வது மாத ஊதியத்திலிருந்து 2,10,000 ரூபாய் மதிப்பீட்டில் பண்ணைக்கருவிகள், தார்பாய்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி திமுக எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமாரும் கலந்துகொண்டார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தனது உரையில் “விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைத்து அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். கலைஞர் ஆட்சியில்தான் இந்தியாவில் முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. மேலும், நேரடி நெல் கொள்முதல் மையம் உருவாக்கி விவசாயிகளின் நலனைக் காத்தவர் கலைஞர். அதுபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கி சாதனை செய்துள்ளார். தற்போது வரவிருக்கும் விவசாய பட்ஜெட்டை, விவசாய பெருமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் எம்.பி. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அவர்களின் கூற்றுப்படி பயிர்களை வாடாமல் பார்த்துக்கொள்ளும் விவசாயப் பெருமக்களாகிய தங்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்”எனப் பேசினார்.