தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், தற்போது வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என மற்றொரு சங்கம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். விடுமுறையின் தொடக்கத்தில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டண வசூல் செய்ததாக கூறி 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த 120 ஆம்னி பேருந்துகளையும் விடுவிக்க கோரி இந்த அறிவிப்பை தென் மாநில பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
விடுமுறை முடிந்து ஊர் திரும்ப பயணிகள் ஆயத்தமாகி வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் மாறன் செய்தியாளர்களை சந்தித்தபோது, “எங்கள் சங்கத்தில் 1,500 பேருந்துகள் உள்ளன; அவை அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். எங்கள் சங்கத்தில் தான் அதிக பேருந்துகள் இருக்கிறது. பொதுமக்கள் பயப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார். இரு சங்கங்களும் வெவ்வேறு அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், ஆர்.டி.ஓ மூலம் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு கட்டண உயர்வு மட்டுமே காரணம் அல்ல, பறிமுதல் செய்யப்பட்ட பெரும்பாலான ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களில் பதிவு செய்து இங்கு இயக்கப்படுபவை என போக்குவரத்து கழகம் விளக்கமளித்துள்ளது.