Skip to main content

“நீ இங்க வாழணும்னா பணத்தோடு வா, இல்லனா வராத..” - மனைவியை விரட்டிய தொழிலதிபர்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

 famous businessman in Salem has filed for divorce from his wife

 

பிரபல தொழிலதிபர் வீட்டுக்கு வந்த இளம்பெண் ஒருவர், திடீரென வீட்டு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் இராமச்சந்திரன். இவர் சேலம், நாமக்கல் மற்றும் ஓசூர் பகுதிகளில் துணிக்கடைகளையும் தனியார் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் மகன் கார்த்திக் பாலாஜி. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் கார்த்திக் பாலாஜிக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தொழிலதிபரின் மகள் சுபராகாவிற்கும்  திருமணம் நடைபெற்றுள்ளது. 

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்த கார்த்திக் - சுபராகா தம்பதி, நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில், கார்த்திக் பாலாஜிக்கு பிசினஸ் தொடர்பான கடன் பிரச்சினைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதனால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு இடையில் அடிக்கடி பிரச்சனைகள் வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், தனது மனைவி சுபராகாவின் வீட்டிலிருந்து 5 கோடி ரூபாய் பணம் வாங்கி வரச்சொல்லி கார்த்திக் பாலாஜி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது அப்பாவுக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் அவர்களும் பணப் பிரச்சனையில்தான் இருக்கிறார்கள் என சுபராகா கூறியுள்ளார். ஆனால், சுபராகாவின் பேச்சால் ஆத்திரமடைந்த கார்த்திக் பாலாஜி குடும்பத்தினர், “நீ இங்க  வாழணும்னா பணத்தோடு வா.. இல்லனா வராத” என தடாலடியாக பேசி வீட்டைவிட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில், தன்னுடைய கணவன் குடும்பத்தினரின் செயலால் மனம் நொறுங்கிய சுபராகா தனது சொந்த ஊரான திருச்சூருக்கு சென்றுள்ளார். இதற்கிடையில் கணவன், மனைவி இடையே ஃபோன் மூலமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், கார்த்திக் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை அறிந்துகொண்ட சுபராகா, கேரளா நீதிமன்றத்திற்குச் சென்று தனது கணவர் விவாகரத்து செய்வதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும், அந்த வழக்கு விசாரணை முடியும் வரை தனது கணவர் வீட்டிலேயே தன்னை இருக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், வழக்கு விசாரணை முடியும் வரை சுபராகாவை அவரின் கணவர் வீட்டிலேயே தங்க அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே கார்த்திக் பாலாஜி வீட்டிற்கு புறப்பட்டு சுபராகா வந்துள்ளார். ஆனால் மருமகள் சுபராகா வந்திருக்கும் தகவல் தெரிந்தும் வீட்டின் கதவைக் கூட திறக்காமல் இருந்துள்ளனர் கார்த்திக் குடும்பத்தினர். கோர்ட்டு அனுமதி தந்தும் வீட்டினுள்ளே அனுமதிக்காததால் தொழிலதிபர் இராமச்சந்திரனின் வீட்டின் வாசலில் அமர்ந்தபடி சுபராகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தகவலறிந்து ஸ்பாட்டுக்கு வந்த போலீசார், இளம்பெண் சுபராகாவிடம் சமாதான பேச்சுவார்த்தை செய்துள்ளனர். பிரபல தொழிலபதிபரின் வீட்டின் எதிரே அவரின் மருமகள் தர்ணாவில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பை நிலவியது.

 

 

சார்ந்த செய்திகள்