புதுக்கோட்டை மாவட்டம், கிள்ளனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 14ம் தேதி ஒரு ஆட்டோவில் வந்த கும்பல் சாலையோரம் உள்ள கோயில்களில் இருந்த பாத்திரங்கள் உள்பட பல பொருட்களையும் திருடிச் சென்றனர். இந்தக் கும்பல் தப்பிச் செல்லும் தகவல் அறிந்து 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அந்தக் கும்பலைப் பிடிக்க சுமார் 20 கி.மீ. தூரத்திற்கு மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்றனர்.
ஏராளமான இளைஞர்கள் தங்களை விரட்டி வருவதைப் பார்த்த ஆட்டோவில் சென்ற கும்பல், இளைஞர்களிடம் இருந்து தப்பிக்க தாங்கள் திருடிய கோயில் பொருட்களை சாலை ஓரங்களில் வீசிக் கொண்டே சென்றனர். பொருட்கள் கிடைத்துவிட்டால் தங்களைப் பின் தொடரமாட்டார்கள் என்பதால் பாத்திரங்களை வீசியுள்ளனர். ஆனால், தொடர்ந்து விரட்டிய இளைஞர்கள் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் வைத்து ஆட்டோவை மடக்கி நிறுத்திவிட்டனர்.
அப்போது அந்த ஆட்டோவில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சக்திநாராயணசாமி மற்றும் அவரது மனைவி லில்லி புஷ்பா, அவர்களின் மகன்கள் விக்னேஷ்வரசாமி, சுபமெய்யசாமி, மகள்களான இரண்டு சிறுமிகள் உட்பட 6 பேர் இருந்துள்ளனர். ஆட்டோவில் கோயிலில் இருந்து திருடிச் சென்ற கொஞ்சம் பொருட்களும் இருந்துள்ளது. அப்போது கோயில் பாத்திரங்களைத் திருடிக் கொண்டு ஆட்டோவில் தப்பிய கும்பலை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு சிறுமி தவிர மற்றவர்கள் காயமடைந்துள்ளனர். இதில் சிறுமி கற்பகாம்பிகா பலத்த காயமடைந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் 6 பேரையும் மீட்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிறுமிக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் புதன் கிழமை மாலை சிறுமி கற்பகாம்பிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோயிலில் திருடிச் சென்றவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலிசாரும் குழந்தைகள் நல அலுவலர்களும் விசாரணை செய்து வருகின்றனர்.