கரோனா நோய்த் தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது அதனைத் திறக்க தமிழக முதல்வர் தலைமையிலான குழு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் அடுத்த எறையாமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அதே ஊரைச் சார்ந்த ஒருவரின் வீட்டு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றுள்ளது.
நோய்த் தொற்று காரணமாக பல மாதங்களாக மூடிக்கிடந்தப் பள்ளிகளைத் திறக்க சில கட்டுப்பாடுகளுடன் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. அதே வேளையில் கரோனா நோய்தொற்று மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறையும், மாநில சுகாதாரத் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளியில் அத்துமீறி மஞ்சள் நீராட்டு விழா நடத்தியிருப்பது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜெயந்தியிடம் கேட்டதற்கு, தன்னிடம் அனுமதி ஏதும் பெறாமல் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளதாக தெரிவித்தார். மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடியிடம் கேட்டதற்கு இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.