காவிரி விவகாரத்தில் தீர்ப்பினை மீறி கேரளாவோ, கர்நாடகாவோ செயல்பட்டால் அதை உறுதியாக தமிழக அரசு எதிர்க்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்குமாறு அதிமுகவின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி இதற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனமும் செய்திருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கள்ள மவுனம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைவந்த கலை. தமிழக அரசு தமிழகத்திற்கு கிடைக்க கூடிய காவிரி நீர் உரிமையை சட்டரீதியாகவும் அதே போன்று தமிழகத்தின் உரிமை என்ற அடிப்படையிலும் நிச்சயமாக பெறுவோம். ஏற்கனவே இது தொடர்பாக நடைபெற்ற டெல்லி கூட்டத்திலும் தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது. தொடர்ந்து வலியுறுத்தக்கூடிய நடவடிக்கை மாநில அரசு எடுக்கும். கேரளா, கர்நாடக காவிரி வடிநிலத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கண்காணிக்க ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. எப்பொழுதும் போல தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கிடைக்கக்கூடிய காவிரி நீர் கிடைப்பதற்கான அனைத்து விதமான நடவடிக்கையும் மாநில அரசு செய்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.