மனிதகுலத்திற்கு மாமருந்தாக மகத்தான சித்தாந்தத்தை கொடுத்தது கம்யூனிசம். இதன் மூலவர் காரல்மார்க்ஸ். இந்த உயரிய சித்தாந்தத்தை நெஞ்சில் ஏந்தி முதன்முதலாக மக்களை திரட்டி ரஷ்ய நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி புது அரசை அமைத்தவர் மாமேதை லெனின் . ரஷ்ய புரட்சிக்கு பிறகு உலகம் முழுக்க கம்யூனிசத்தின் சித்தாந்தம் வெகுவாக பரவத்தொடங்கியது.
அப்படித்தான் இந்தியாவிலும் கம்யூனிச கோட்பாடுகள் ஆங்காங்கே தீவிரமாக விளையத் தொடங்கியது. விவசாயிகள், தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அவர்கள் தலைமையில் ஒரு சுரண்டலற்ற சமூகத்தை உருவாக்க முடியுமென்றால் அது கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும் என்கிற உறுதியோடு இந்திய நாடு முழுக்க பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கத் தொடங்கினார்கள்.
ஆனால் அமைப்பு ரீதியாக கட்டமைப்பு இல்லாமல் இருந்தது. இந்நிலையில் மறைந்த சிங்கரா வேலர் உட்பட பல தலைவர்கள் இணைந்து முதன்முதலாக இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை உருவாக்கினார்கள். கடந்த 1925 டிசம்பர் 26 ஆம் தேதி முதன்முதலாக கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை உருவானது. ஆக, கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் முறைப்படி அமைப்பாக உருவானது 1925 டிசம்பர் 26 ல் தான். இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வயது 95.
உலகில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றி இது நூறாவது ஆண்டு ஆகும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 95 ஆண்டுகளை கடந்துள்ளது. இதை இந்தியா முழுக்க உள்ள கம்யூனிஸ்ட்டுகள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான புதுடெல்லி அஜய் பவனில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா செங்கொடியை ஏற்றி வைத்தார்.
அதேபோல் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில நிர்வாகிகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என கட்சி அலுவலகத்தில் செங்கொடியை ஏற்றிவைத்து "இன்குலாப் ஜிந்தாபாத்" என கோஷமிட்டனர். தமிழகத்தில் சென்னை பாலத்தில் மூத்த தலைவர் நல்லகண்ணு கொடியேற்றினார்.ஈரோடு மாவட்டத்தில் பவானி பெருந்துறை, சிவகிரி கோபி சத்தியமங்கலம் என ஒவ்வொரு ஊர்களிலும் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் கொடியை ஏற்றி "புரட்சி வாழ்க" என கோஷமிட்டனர்.
மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் மக்களை மதரீதியாக பிரிக்கும் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என பாஜக அதன் கொள்கை ரீதியான அரசை நடத்திக்கொண்டிருக்கும் போது மக்கள் மத்தியில் அதற்கு மிக கடுமையான எதிர்ப்புகள் நாடு முழுக்க பெருகிவருகிறது. இந்த சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒற்றுமையும் இடதுசாரிகள் முன்னெடுக்கும் மக்கள் மயமான நடுநிலை செயல்பாடுகளும் இந்தியாவுக்கு அவசியமான ஒன்று என கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அமைப்பு தினமான இன்று ஆங்காங்கே உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி உரையாற்றினார்கள்.