Skip to main content

நாகையில் தீபாவளிக்காக வேகமெடுக்கும் மது கடத்தல்!

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

தீபாவளியை முன்னிட்டு காரைக்காலில் இருந்து கள்ள மதுபாட்டில்கள் கடத்தலை துவங்கியிருக்கின்றனர் கடத்தல்காரர்கள், இதற்கு நாகை மாவட்ட எல்லையோர காவல்துறை அதிகாரிகளும், மதுவிலக்கு பிரிவு உயர் அதிகாரி ஒருவரும் உதவியாக இருப்பதாக பிடிபட்டிருக்கும் கள்ளச்சாராய கடத்தல்காரர்கள் கூறுகின்றனர்.
 

fake liqours found


வரும் 27 ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளிக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் வேலைப்பார்ப்பவர்கள் கூட வீட்டிற்கு வந்து குடும்பத்தினரோடு குதுகலமாக கொண்டாடுவார்கள், தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கள்ளச்சாராய  வியாபாரம் படு ஸ்பீடாக இருக்கும். பல ஆயிரம் கோடிகளுக்கு குவித்துவிடுவார்கள் கள்ளச்சாராய விற்பனையாளர்களும், உற்பத்தியாளர்களும்.

தீபாவளிக்கு விற்பனை செய்வதற்கான மதுபாட்டில்களை தீபாவளி நெருக்கத்தில் அவ்வளவு எளிதாக கடத்திவிட முடியாது என்பதையும், தீபாவளி சமயத்தில் பல இடங்களில் சோதனைகள் நடக்கும் என்பதாலும் முன்கூட்டியே கடத்த நாகை மாவட்ட மதுவிலக்கு பிரிவு உயர்அதிகாரி ஒருவரின் தகவல் படி பத்து நாட்களுக்கு முன்பிலிருந்தே மது கடத்தல் வேலைகளை தொடங்கி விட்டனர் என்கிறார் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கள்ளச்சாராய வியாபாரி.

இது குறித்து அவரிடமே விசாரித்தோம், " காரைக்காலில் குவாட்டர் ஒரு பாட்டில் 50 ரூபாய் அதே பாட்டில் தீபாவளி சமயத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை,பெரம்பலூர், அரியலூர், திருச்சியில் 150 ரூபாய் வரை விற்பனையாகும். அதோடு ஸ்பிரிட் பவுடரும், மதுபாட்டில்களும், ஸ்டிக்கர்களும் காரைக்காலில் ஹோல்சேலாக கிடைக்கிறது. அதையும் வாங்கி சென்று மது பாட்டில்களை சொந்தமாகவே தயாரித்து விற்பனை செய்வார்கள். இதில் தான் கொள்ளை லாபம், ஆனால் அதை குடிப்பவருக்கு பெருத்த நஷ்டம், சீக்கிரமே குடல் அரித்துவிடும்.

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட கடலங்குடியில், நாகை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சாமிநாதனின் அருளாசியோடும், மணல்மேடு காவல்துறை இன்ஸ்பெக்டர் தியாகராஜனின் ஆதரவோடு பொதுமக்கள் நடமாட்டமில்லாத வயல்களுக்கு நடுவில் மோட்டார் கொட்டகையில் ஸ்பிரிட் வாங்கிவந்து கள்ளச்சாராயத்தை உற்பத்திசெய்கின்றனர். அங்கிருந்து சுற்றுவட்டாரத்தில் 50 கிலோமீட்டர் வரை அவர்கள் சப்ளை செய்கின்றன. மதுவிலக்கு டிஎஸ்பிக்கும், இன்ஸ்பெக்டருக்கும் வாரம் ஞாயிற்றுக்கிழமை வருகிறதோ இல்லையோ, இவர்களின் பணமும் நல்ல கிடாகுட்டியின் கரியும் மறக்காமல் போய்விடும்.

இது வழக்கமானது, தற்போது தீபாவளி சமயம் என்பதால் அந்தசமயத்தில் கடத்த முடியாது என காவல்துறையினரே தகவல் கொடுப்பாங்க. இந்த ஆண்டும் அப்படி தகவல் கொடுத்திருக்கிறதா எனக்கு பழைய நன்பர்கள் சொல்கிறார்கள். இந்த ஐந்து நாட்களில் காரைக்காலில் இருந்து கடத்தப்படும் சரக்கு நாகை மாவட்டத்தை தாண்டி தான் மற்ற மாவட்டங்களுக்கு போகமுடியும், அந்த மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சாமிநாதனுக்கு காரைக்கால் மொத்த வியாபாரிகளின் தொடர்பு இருக்கும், அவர்கள் மூலம் எங்கிருந்து எவ்வளவு சரக்கு போகிறது, எந்த வழியா போகிறது, கார்நம்பர், கடத்துபவர் நம்பர் வரை வாங்கிக்கொண்டு வசூல் வேட்டையை செய்வார். முரண்டு பிடிப்பவர்களையும், புதிதாக தீபாவளிக்காக வருபவர்களையும் பிடித்து வழக்கு போட்டு பிடித்து வருவதாக கணக்கு காட்டிடுவார்,  பழைய ஆளுங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு எந்த வழியாக போகனும், எந்த வழியா வரனும்னு யோசனை கொடுத்துடுவாங்க. மற்றபடி விற்பனை நடக்கும் உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு வார மாமூல் கொடுத்துடுவாங்க. தீபாவளிக்குள் மதுவிலக்கு டிஎஸ்பிக்கு மட்டுமே பல லட்சம் வசூலாகிடும்." என்கிறார்


அவர் சொன்னது போலவே இன்று அடுத்ததுடுத்து மன்னார்குடியிலும், மயிலாடுதுறை அருகே உள்ள அரும்பாக்கத்திலும் பிடிபட்டுள்ளனர், அவர்கள் காவல்துறையினரிடம், தீபாவளி விற்பனைக்காக கடத்தியதாக கூறியுள்ளனர்.

இது உண்மையா என மதுவிலக்கு டி,எஸ்,பி சாமிநாதனிடமே கேட்டோம், "யாரோ எனக்கு வேண்டாதவங்க கிளப்பிவிடுற செய்திங்க, இப்ப உள்ள எஸ்.பி கடுமையா இருப்பதோடு, தனி டீம் போட்டு பிடிக்கவச்சிருக்கோம், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கார், முன்னூருக்கும் அதிகமான டூவிலர்களை சரக்கோடு பிடிச்சி வழக்குப் போட்டுள்ளோம்,  இப்ப குறிப்பிட்டுள்ள இடங்கள் ரொம்ப இன்டீரியல் ஏரியா உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்" என்கிறார் விவரமாக.

சார்ந்த செய்திகள்