கஜா புயல் தாக்கி இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் அதன் தாக்கத்தில் இருந்து இன்னும் விவசாயிகள் மீளவில்லை. மேலும் புயலில் அசைந்து நின்ற தென்னை மரங்களும் காய்க்காததால் தோப்புகளை கண்ணீரோடு வெட்டி அழித்து வருகிறார்கள் விவசாயிகள்.
2018 நவம்பர் 16 அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை கஜா புயல் ஆட்டி அசைத்துவிட்டு சென்றது. மரங்கள், கட்டிடங்கள், மின் கம்பங்கள், படகுகள் உடைந்து விழுந்தன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீண்டு எழ முடியாமல் தவித்து கொண்டிருந்த விவசாயிகளுக்கும், எஞ்சியுள்ள தென்னை மரங்களை வைத்து வாழ்க்கையை நகர்த்தி விடலாம் என்று எண்ணி இருந்த விவசாயிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
புயலில் அசைந்து நின்ற தென்னை மரங்களுக்கு உரம், குப்பை வைத்து வழக்கம் போல பராமரித்தனர். ஆனால் 2 ஆண்டுகளை தொட உள்ள நிலையில் எந்த வளர்ச்சியும் இல்லை. ஒரு பாளை கூட வெளியே வரவில்லை. அதனால் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் பலனில்லை என்ற முடிவில் தாங்கள் நட்டு வளர்த்த தென்னை மரங்களை தாங்களே வெட்டி அழித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தென்னை விவசாயம் அதிகம். ஆனால் காய்ப்பு இல்லை என்று வெட்டி அழிப்பதும் இந்த பகுதியில்தான் அதிகம். வெட்டப்படும் தென்னை மரங்களை சேலத்திற்கு செங்கல் சூளைகளுக்கு குறைந்த விலைக்கு அள்ளி செல்கிறார்கள்.
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறும்போது, தென்னையை பிள்ளை போல வளர்த்து வந்தோம், கஜா புயல் அழித்துவிட்டு போனது. எஞ்சிய தென்னை மரங்கள் எங்களை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில் செலவுகள் செய்து உரம், குப்பை வைத்தும் பலனில்லை. தொடர்ந்து பராமரிக்க வசதியும் இல்லை, தண்ணீரும் இல்லை. அதனால் ரூபாய் 300 செலவு செய்து ஒரு மரத்தை வெட்டி ரூ. 250 க்கு அதாவது 50 ரூபாய் நட்டத்தில் செங்கல் சூளைக்கு கொடுக்கிறோம். புதிதாக நட்ட தென்னங்கன்றுகளையும் வண்டு, பூச்சிகள் தாக்கி அழிக்கிறது. விவசாயிகள் எந்த வகையிலும் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றனர் வேதனையாக.