தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த 15, 20 வருடங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருக்கும் இளைஞர்களின் குடும்பத்தினருக்கு லேண்ட்லைன் போனில் தொடர்பு கொண்டு உங்களுக்கு பார்சல் அனுப்பி இருக்கிறேன். அந்த பார்சல் கொண்டு வரும் நபரிடம் குறிப்பிட்ட பணத்தை கொடுத்து பார்சலை பெற்றுக் கொள்ளும்படி தங்கள் உறவுகள் பேசுவதுபோல குரலை மாற்றி பேசிவிட்டு, அதே நபர்கள் அடுத்த சில நாட்களில் ஏதாவது ஒரு இடத்தை குறிப்பிட்டு வரச்சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு செங்கல், காகிதம், தெர்மாகோல் அடங்கிய பார்சலை கொடுத்து விட்டு தப்பிச்சென்று விடுவார்கள். இப்படியே பல ஆயிரம் குடும்பத்தினர் ஏமாந்துள்ளனர்.
ஆனால் கடந்த சில வருடங்களாக செல்போன் எண்களை சேகரித்து குலுக்கல் நடத்தியதில் உங்களுக்குக் குலுக்கலில் பல லட்சம் மதிப்புள்ள பரிசு கிடைத்திருக்கிறது, அதனைப்பெற குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வங்கி கணக்கில் செலுத்தினால் பரிசு பொருள் வீடு தேடி வரும், என்று ஏமாற்றினார்கள். அதேபோல் பேங்க் மேனேஜர் பேசுறேன் உங்க ஏடிஎம் கார்டு லாக் ஆகப்போகுது, கார்டு நம்பர் சொல்லுங்க ஓடிபி வரும் அதையும் சொல்லுங்க லாக் ஓபன் பண்ணித் தரேன் என்று சொல்லி மோசடி செய்து வருகின்றனர்.
இதேபோல கடந்த சில வருடங்களாக முகநூலில் உள்ள குறிப்பிட்ட சிலரது கணக்குகளில் உள்ள படங்களை எடுத்து புதிய கணக்கு தொடங்கி அவசரமாக பணம் தேவை என மெசேஞ்சரில் தகவல் அனுப்பி பணம் பறிப்பதும் நடந்து வருகிறது. இப்படி எல்லாம் பணம் பறிக்கும் கும்பல் குறித்து புகார் கொடுக்கும் போதெல்லாம் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் தற்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் படத்தைப் பயன்படுத்தி மோசடிக் கும்பல் கிளம்பியிருக்கிறது.
இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது முகநூல் பதிவில்... 'என் படத்தைப் பயன்படுத்தி என் அலுவலக ஊழியர்களுக்கு தகவல் அனுப்பி குறிப்பிட்ட நிறுவனத்தின் கூப்பனை வாங்க கூறியுள்ளார். அந்த நபர் பற்றிய முதல் தகவலில் இதைச் செய்தது மகாராஷ்டிரா இளைஞர்கள் என்பது தெரிய வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மோசடி இளைஞர்கள் குறித்து புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்டவர்களைத் தேட தொடங்கியுள்ளனர். இந்த புகாரிலாவது மோசடி இளைஞர்களை கைது செய்தால் நல்லது.