திருச்செங்கோட்டில் போலியாக ஹால்மார்க் குறியீடு இட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 10 கிலோ வெள்ளிக் கொலுசுகளை பி.ஐ.எஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பி.ஐ.எஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைவன நிறுவனத்தின் கோவை கிளை அலுவலகத்தின் முதுநிலை இயக்குநர் கோபிநாத் தலைமையில் அலுவலர்கள் குழுவினர், போலி பி.ஐ.எஸ் முத்திரையிடப்பட்ட பொருட்கள் விற்பனை மற்றும் போலி ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பி.ஐ.எஸ் நிறுவன இணை இயக்குநர் ஜீவானந்தம், உதவி இயக்குநர் கவின் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள், கடந்த சில நாள்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு தேரடி வீதியில் பி.ஐ.எஸ் உரிமம் பெறாமல் ஒரு தனியார் நிறுவனம் தங்கம், வெள்ளி நகைகளுக்கு போலியாக ஹால்மார்க் தரக்குறியீடு பதிவிட்டு விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது, போலி ஹால்மார்க் முத்திரையுடன் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 9.70 கிலோ வெள்ளிக் கொலுசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகளை கோவை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக பி.ஐ.எஸ் அலுவலர்கள் கூறுகையில், ''பி.ஐ.எஸ் உரிமம் இல்லாமல் அசேயிங் மற்றும் ஹால்மார்க் மையங்களில் நகைகளை ஹால்மார்க் குறியீடு பதிவு செய்யக்கூடாது. விதிகளை மீறி போலி ஹால்மார்க் குறியீடு செய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செங்கோட்டில் பி.ஐ.எஸ் உரிமமின்றி செயல்பட்ட மையத்தில் இருந்து போலி தரக்குறியீடு செய்யப்பட்டு இருந்த சுமார் 10 கிலோ வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்துள்ளோம். இதுபோன்ற திடீர் சோதனைகள் இனி அடிக்கடி நடத்தப்படும்'' என்றனர்.