புதுச்சேரி மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் போலி ஏ.டி.எம் கார்ட் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளை கும்பல் ஒன்று அண்மையில் புதுச்சேரியில் கைதானது. பிடிபட்ட கொள்ளையர்களிடம் போலீசார் விசாரித்ததில் இந்த குற்ற செயலுக்கு பின்னால் மூளையாக இருந்து செயல்பட்டதே அ.தி.மு.க பிரமுகர் சந்துருஜீ தான் என்ற தகவல்களை அவர்கள் தெரிவித்ததால். சந்துருஜீயை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது புதுச்சேரி போலீஸ் பிரிவு. 400 கோடி ரூபாய் கொள்ளை குறித்த இந்த தகவலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நக்கீரன் இணையத்தில் பதிவிட்டிருந்தோம்.
இருப்பினும் கடந்த ஐம்பது நாட்களுக்கு மேலாக சந்துருஜீயை பிடிக்க முடியாமல் தவித்து வந்த புதுச்சேரி சிபி.சி.ஐடி போலீசார் ‘நாங்கள் சந்துருஜீயை பிடிக்க அவர் தலைமறைவாக தங்கியுள்ள இடங்களுக்கு சென்றால் எங்களுக்கு அங்கு ஏமாற்றம் தான் கிடைக்கிறது. இந்த ஐம்பது நாட்களில் இந்தியா முழுவதும் சந்துருஜீயை பிடிக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் தான் முடிந்தது’ என கடந்த சனிக்கிழமை வரை சொல்லி வந்த போலீசார். இந்த வழக்கோடு தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சத்யாவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்து நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் சந்துருஜீ மறைந்திருந்த இடத்தை சொல்லியதாக போலீஸ் தரப்பில் நம்மிடம் சொல்லப்பட்டது. சத்யா கைதான சில மணி நேரங்களில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான சந்துருஜீயின் தம்பி மணி சந்தரையும் கைது புதுச்சேரி சிறையில் அடைத்து விசாரித்தனர் சிபி.சி.ஐடி. போலீசார்.
அவர் கொடுத்த முக்கிய தகவலை கொண்டு சந்துருஜீ தங்கியிருந்த மறைவிடத்தை அறிந்து கொண்டு மும்பைக்கு விரைந்த போலீசார் இன்று அதிகாலை சந்துருஜீயை கைது செய்து கடந்த 13 மணி நேரமாக மும்பையிலேயே ஒரு ரகசிய இடத்தில் விசாரித்து வருகிறது. போலீஸ் விசாரணையில் சந்துருஜீ கொடுக்கும் தகவலின் அடிப்படியில் இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்ற விவரம் இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும். கைதான சந்துருஜீ புதுச்சேரி அ.தி.மு.க -வில் முக்கிய பதவியில் இருப்பதால் இந்த வழக்கில் புதுச்சேரியை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிகிறது. அது அனைத்தும் சந்துருஜீ சொல்லும் தகவலை பொறுத்து தான் உள்ளது என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. சந்துருஜீ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தை அரசியல் பிரமுகர்கள் கலக்கத்தில் உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. சந்துருஜியின் கைது சம்மந்தமான போட்டோவை இதுவரை காவல்துறை வெளியிடவில்லை.
சிவரஞ்சனி