காஞ்சிபுரம் - நீர்வள்ளூர் - எட்டு வருடமாக பணியிலிருந்த 22 தொழிலாளர்களை பணி நீக்கியதை கண்டித்து நீர்வள்ளூர் எஸ்எச்சி எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை முன்பு வாயிற்கதவை அடைத்து குடும்பத்துடன் முற்றுகை போராட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம். இம்மாவட்டத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் மூன்று சிப்காட் தொழிற் பூங்கா உள்ளது. காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் நீர்வள்ளூர் ஆரியம்பாக்கம் கிராமத்தில் எஸ்.எச்.சி. என்ற எலக்ட்ரானிக் தொழிற் நிறுவனம் இயங்கி வருகின்றது . இதில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் சாம்சங் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் தயாரித்து அளித்து வருகிறது .
இந்நிலையில் இதில் கடந்த எட்டு வருடங்களாக பணிபுரிந்து வந்த 22 தொழிலாளர்களை திடீரென்று இந்த நிறுவனம் பணி நீக்கம் செய்தது .இதனால் அவர்கள் தங்களது வாழ்வாதாரம் தடைபடவே செய்வதறியாமல் அதிர்ச்சியுற்றனர். இந்த நிலையில் இன்று பாதிக்கபட்ட 22 தொழிலாளர்களும் தமது குடும்பத்தினருடன் இந்த நிறுவன வாயிலை அடைத்து முற்றுகையிட்டு தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனவும், வேலை வாய்ப்பில் தமது கிராமத்தினருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் ஆட்டுபுத்தூர் தை கோபி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அந்த நிறுவனத்திற்குள் பணிபுரியும் நூற்றுக்கணக்கானோர் யாரும் உள்ளே செல்ல முடியாத சூழ்நிலை உருவானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் தாலுக்கா மற்றும் சுங்குவார்சத்திரம் காவல் துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் நிறுவன நிர்வாகிகளிடமும், தொழிலாளர் துணை ஆய்வாளரிடம் பேசி இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் ஆய்வாளர் வெற்றி செல்வன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் பு.பெ.கலைவடிவன், மாநில வழக்கறிஞர் அணி நிர்வாகி தாடி .கார்த்திக், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் டேவிட், மாவட்ட துணை செயலாளர் திருமாதாசன், ஊர் மக்கள் சார்பாக கந்தன், காண்டீபன், சாந்தி, ஈஸ்வரி, மேகலா உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.