Skip to main content

நடராஜன் மறைவு: சசிகலாவுக்கு பரோல் கேட்க ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
natarajan


கணவர் நடராஜனின் மறைவை அடுத்து சசிகலாவுக்கு பரோல் பெற மனு தாக்கல் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. சசிகலாவிடம் கையெழுத்து பெற்று பரோல் மனு தாக்கல் செய்யப்படும் என அவரது வழக்கறிஞர் அசோகன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் நள்ளிரவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 76. புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 16-ம் தேதி, சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்த இடங்களில் நோய் தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து நள்ளிரவு 1 மணி 35 நிமிடத்தில் உயிரிழந்தார்.

பெசன்ட் நகரில் அவரது இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரான தஞ்சைக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.