கரோனா பரபரப்பாக பரவி வரும் இந்த நேரத்தில், அது சம்பந்தமான பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்துகிறார்கள் கடைக்காரர்கள். பொது மருத்துவம் அதிலும் முகக் கவசம் அணிய வேண்டி பல வடிவங்களில் வரும் மாஸ்க் முகக் கவசம் என்ற விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
இந்த முகக் கவசத்திற்கு எங்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள வயதான முதியவர்கள் வைத்துள்ள பெயர் முகத்தில் முகக் கவசம் இல்லாமல் வருபவர்களை பார்த்து ஏன் மூஞ்சி புட்டி போடாமல் வருகிறாய் என்று கேட்கிறார்கள். இந்த வட்டார சொல்வழக்கு எப்படி வந்தது தெரியுமா?
கிராமப்புறங்களில் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும்போது, அது செல்லும் வழியில் உள்ள வயல்களில் தோட்டங்களில் உள்ள பயிர்களை மேய்ந்து விடாமல் இருப்பதற்கு அதன் முகத்தில் பிரம்பால் செய்யப்பட்ட முகக் கவசம் போட்டுவிடுவார்கள்.
மேய்ச்சல் பகுதிக்குச் சென்ற பிறகு அந்த மூஞ்சிபுட்டியை அவிழ்த்து விடுவார்கள். அதன்பிறகே மாடுகள் மேயும். அதேபோல் வீடுகளில் பால் மாடுகள் அருகில் இருக்கும் அதன் கன்றுக்குட்டிகள் அடிக்கடி ஓடிச்சென்று அதன் தாய் மடியில் சுரந்து உள்ள பாலை குடிக்கும். இதைத் தடுக்கும் விதத்தில் அவ்வப்போது இளங்கன்றுகளுக்கு மூஞ்சி புட்டி போட்டு விடுவது உண்டு.
இந்த மூஞ்சி புட்டிகளை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா. காட்டில் தானே முளைத்து வளரும் விடத்தரன்செடி பிறகு மரமாகவும் வளரும். அதேபோல் பிரப்பன் கழி திரணி செடி. இவைகள் மூலம் மாடுகளுக்கும், கன்றுகளுக்கும் மூஞ்சி மூட்டி தயாரிப்பதோடு அந்தச் செடிகள் மூலம் மாடுகளுக்கு தீவனம் வைக்கும் குடலை (ரவுண்டாக இருக்கும்) ஆடு மாடுகளின் கழிவுகளை அள்ளுவதற்கு தட்டுக் கூடை இப்படிப் பல்வேறு விதமான பயன்பாடுகளை அந்தச் செடிகள் மூலம் செய்வார்கள் காலமாற்றத்தில் அவைகள் இப்போது மறைந்து போனாலும் கூட, கரோனா நோய் வராமல் இருப்பதற்கு முகக் கவசம் அணிவதைப் பார்த்து கிராமத்து பெரியவர்கள் பழைய கால ஞாபகத்தில் மூஞ்சி புட்டி என்று பெயர் வைத்து பழைய நினைவுகளை மறக்காமல் கூறுகின்றனர்.
காலத்திற்கு ஏற்றவாறு தற்போது நெய்வேலியில் ஒரு செல் கடை முன்பு வடிவேல் படத்தை வாசகத்துடன் மறைந்து முகக் கவசம் அணிவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மிகவும் வித்தியாசமாக உள்ளது. அந்த வழியே செல்பவர்கள் கவனத்தைக் கவர்ந்துள்ளது அந்த விளம்பரங்கள்.