சேலத்தில், வாகன நெரிசல் மிகுந்த, போக்குவரத்து சிக்னல் அருகே ஸ்மார்ட் ட்ரீ என்ற பெயரில் யாருக்கும் பயன்படாத சோலார் மரத்தை நட்டு, மக்கள் பணத்தை விரயமாக்கி இருக்கிறது மாநகராட்சி நிர்வாகம்.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சேலத்தை சீர்மிகு மாநகரமாக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது. தரமான சாலைகள், சாக்கடைக் கால்வாய்கள், சுகாதார மையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக்கூட முழுமையாகவும், சரியான வகையிலும் பூர்த்தி செய்து தருவதற்கே தகிடு தத்தம் போட்டு வரும் சேலம் மாநகராட்சிக்கு, சீர்மிகு மாநகரம் திட்டம் என்பது குருவித் தலையில் பனங்காயை வைத்த கதையாக விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது.
அதனால்தான், மைய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு முதல்கட்டமாக ஒதுக்கிய 111 கோடியை எப்படி செலவழிப்பது என்பதில்கூட சரியான திட்டமிடல் இல்லாமல், பணத்தை வைத்துக்கொண்டு இரண்டு ஆண்டுகள் தடுமாறிக் கொண்டிருந்தது. அதன்பிறகு, தற்காலிக பேருந்து நிலையம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், நுண்ணுயிர் உரக்கிடங்கு, சோடியம் விளக்குகளை அகற்றிவிட்டு எல்இடி விளக்குகள் பொருத்தம் என சில பணிகளை 18.62 கோடி ரூபாயில் செய்தது.
இது ஒருபுறம் இருக்க, எல்லோருக்கும் கட்டணமின்றி வைஃபை வசதி கிடைக்கும் நோக்கில், சேலம் மாநகரில் ஸ்மார்ட் ட்ரீ என்ற பெயரில் ஒரு சோலார் (சூரிய சக்தியில் இயங்குவது) மரத்தை நிறுவியிருக்கிறது மாங்கனி மாநகராட்சி. முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்கக்கூடியது இந்த மரம். இந்த மரத்தின் அடியில் பொதுமக்கள் அமர ஒரு நீண்ட பலகையும் போடப்பட்டு உள்ளது. அந்தப் பலகையின் முன்புறத்தில், செல்போன் சார்ஜர் 'பின்' சொருகும் வகையில் இரண்டு பிளக் பாயிண்டுகளும் தரப்பட்டு உள்ளன. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் அந்த ஸ்மார்ட் ட்ரீக்கு அடியில் சென்று, செல்போன்களுக்கு கட்டணமின்றி சார்ஜர் போட்டுக் கொள்ளலாம். அதேபோல் கட்டணமின்றி வைஃபை சேவையையும் பெறலாம். இவைதான் இந்த ஸ்மார்ட் ட்ரீ திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்.
உண்மையைச் சொல்லப்போனால், சேலத்தில் இப்படி ஒரு ஸ்மார்ட் ட்ரீ இருப்பதே பலருக்கும் தெரியாது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ரவுண்டானாவில் இருந்து மாநகராட்சி மைய அலுவலகம் செல்லும் வழியில், சிஎஸ்ஐ சர்ச் சுற்றுச்சுவரை ஒட்டி, மாநகராட்சி கட்டடத்திற்கு எதிரில், இந்த ஸ்மார்ட் ட்ரீ நிறுவப்பட்டு உள்ளது. இதற்கான செலவு 5.50 லட்சம் என்கிறது சேலம் மாநகராட்சி. இந்த மரம் நிறுவப்பட்டதில் இருந்து, இதுவரை ஒருவர்கூட அதன் சேவைகளைப் பயன்படுத்தியதாக எந்தப் பதிவுகளும் இல்லை.
அது மட்டுமல்ல.
இந்த ஸ்மார்ட் ட்ரீ நிறுவப்பட்ட இடமானது எப்போதும் வாகன நெரிசல் மிகுந்த மற்றும் போக்குவரத்து சிக்னல் உள்ள பகுதியாகும். அதனால் வாகன ஓட்டிகள் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, தங்கள் செல்போனுக்கு சார்ஜ் ஏற்றுவது என்பதும், வைஃபை இணைப்பு பெற்று பொழுதுபோக்குவது என்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.
நாமும் அந்த ஸ்மார்ட் ட்ரீயின் அடியில் சென்று வைஃபை சேவையைப் பெற முயற்சித்தால், அதற்கான இணைப்பு கிடைக்கவில்லை. ஒரு காக்கா, குருவிக்குக்கூட பலன் தராத ஸ்மார்ட் ட்ரீ என்ற பெயரில், சேலம் மாநகராட்சி மக்களின் பணத்தை விரயமாக்கி உள்ளது.
துக்ளக் தர்பார் நடத்துகிறது சேலம் மாநகராட்சி.