திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ரூ.87.78 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.69 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார்.
இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்களின் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் பொதுமக்கள் குடிமைப்பொருட்களை பெறுவதற்காக நீண்ட தூரம் சென்று சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர்கள் குடியிருப்புகளுக்கு அருகிலேயே குடிமைப்பொருட்களை பெற்று பயன்பெறும் வகையில், புதியதாக நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 2009 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேரம் நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 230 கடைகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் 70 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில், தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 16 இலட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலம் பதிவுகள் மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கண் கருவிழி பதிவுகள் மேற்கொள்ள 36,000 நியாயவிலைக் கடைகளிலும் கண்கருவிழி பதிவு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் இயந்திரம் பொருத்தப்பட்ட 676 அரிசி ஆலைகளில் மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு கறுப்பு, பழுப்பு இல்லாத தரமான அரிசி விநியோகிக்கப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மகளிருக்காக விடியல் பயணத்திட்டம் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் திண்டுக்கல் கோட்டத்தில் 2 இலட்சம் பயனாளர்களும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 44.65 இலட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு மகளிருக்கு சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் மேம்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, 1.16 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1.48 இலட்சம் நபர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மாணவ, மாணவிகள் பசியின்றி கல்வி கற்றிட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். இத்திட்டம் மூலம் 31,008 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18.50 இலட்சம் மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர். இத்திட்டம் தற்போது, அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 3993 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.23 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவர். ஆகமொத்தம் தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டத்தின் மூலம் மொத்தம் 20.73 இலட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒட்டன்சத்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் என்ற வகையில் வழங்கப்படும். தமிழ்நாட்டினை குடிசை இல்லா மாநிலமாக உருவாக்க கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக ஒரு இலட்சம் வீடுகள் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி வழங்கப்படவுள்ளது. மேலும், பழுதடைந்த வீடுகளை பராமரிக்க ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டிலும் 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள சாலைகளில் 2000 கி.மீட்டர் நீளம் சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளன. அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 200 கி.மீட்டர் நீளம் சாலைகள் மேம்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது.
விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்துவதற்காக வேளாண்மை நிதிநிலை அறிக்கை தனியாக தாக்கல் செய்யப்படுகிறது. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய விளைபொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக ஒட்டன்சத்திரத்தில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிட்டங்கி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 13 சங்கங்களை நவீனமயமாக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. இன்றையதினம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரியாம்பட்டி ஊராட்சி, கரியாம்பட்டி கிராமம், சிக்கமநாயக்கண்பட்டி ஊராட்சி, வெள்ளமடை கிராமம், கள்ளிமந்தையம் ஊராட்சி, ஒத்தையூர் பிரிவு, கள்ளிமந்தையம் ஊராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில், பொருளூர் ஊராட்சி, பொருளூர் கிழக்கு ஆதிதிராவிடர் காலனி ஆகிய இடங்களில் தலா ரூ.10.00 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை, போர்டுவார்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.28.01 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலம், கொத்தையம் ஊராட்சி, வல்லகுண்டாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.9.77 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்டடம் என மொத்தம் ரூ.87.78 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, கள்ளிமந்தையம் ஊராட்சி, நீலாகவுண்டன்பட்டி கிராமம், சிக்கமநாயக்கண்பட்டி ஊராட்சி, பொட்டிக்காம்பட்டி கிராமம், தேவத்தூர் ஊராட்சி, பெருமாள்நாயக்கன்வலசு கிராமம், போடுவார்பட்டி ஊராட்சி, போடுவார்பட்டி கிராமம், பொருளூர் ஊராட்சி, புளியம்பட்டி பிரிவு, மங்கையம்மா கோவில் அருகில், மேட்டுப்பட்டி ஊராட்சி, மேட்டுப்பட்டி கிராமம், வேலம்பட்டி ஊராட்சி, தாராபுரம் மெயின் சாலை ஆகிய இடங்களில் தலா ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், கள்ளமந்தையம் ஊராட்சி, நீலாக்கவுண்டன்பட்டி கிராமம், 16-புதூர் ஊராட்சி, 16-புதூர் கிராமம், பொருளூர் ஊராட்சி, பொருளூர் கிராமம் ஆகிய இடங்களில் தலா ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக்கடை கட்டடங்கள் மற்றும் வேலம்பட்டி ஊராட்சியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம், நபார்டு திட்டத்தின் கீழ், சிக்கமநாயக்கண்பட்டி ஊராட்சி, பொட்டிக்காம்பட்டி கிராமம் ஆகிய இடங்களில் தலா ரூ.18.42 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, கொத்தையம் ஊராட்சி, வல்லகுண்டாபுரம் கிராமம் மற்றும் மேட்டுப்பட்டி ஊராட்சி, திருவாண்டபரம் கிராமம் ஆகிய இடங்களில் தலா ரூ.8.04 இலட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி என மொத்தம் ரூ.1.69 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு இன்று(24.07.2024) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.