ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் கமல் வம்சி. இவர் வேலூரில் ஒரு பணிக்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். பின்னர் வேலையை முடித்துக்கொண்டு வேலூர் காட்பாடி வழியாக சித்தூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே சுரேஷ், பிரசாந்த் ,ரோஹித் ஆகியோர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கமல் வம்சி வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
கமல் வம்சி வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு, ''என் வண்டி அதிகமாக டேமேஜ் ஆகி விட்டது, அதை சரி செய்ய அதிக செலவாகும், நாங்களும் ஹாஸ்பிட்டலுக்கு போகனும், அதுக்கு நீ தான் பணம் தர வேண்டும்'' என கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அவரும் பயந்து போயுள்ளார். 'எங்கிட்ட பணம் இல்லை' எனச்சொன்னதை கேட்காமல், அவர் அணிந்திருந்த அரை சவரன் தங்க மோதிரம், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டனர். அதுவும் போதாது என அவர் செல்போன் வாங்கி ஜி-பேயில் 10,000 ரூபாய் பணத்தை தங்களது செல்போனுக்கு அனுப்பிக்கொண்டு, 'ஒழுங்கா ஊர் போய் சேரு' எனச் சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
தன்னை மிரட்டி பணம், நகை, பொருள் பிடுங்கிக் கொண்டு சென்றதில் அதிர்ச்சியான கமல் வம்சி நேராக காட்பாடி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மிரட்டி பணம் பெற்றதாக கூறப்படுபவர்களை டிரேஸ் செய்து, சுரேஷ், பிரசாந்த் ஆகிய இரண்டு பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணம் பறித்தது உண்மை என தெரியவர அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொரு குற்றவாளியான ரோகித்திடம் அரை சவரன் மோதிரம் மற்றும் வாட்ச் இருப்பதாக தெரிவித்த நிலையில் தலைமறைவாக உள்ள ரோகித்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.