தமிழகத்திற்கென்று பிரத்யேக கல்விக்கொள்கையை உருவாக்குவதற்காக 13 பேர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர். ஒரு வருட காலத்திற்குள் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும், தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தக் கல்வி கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும், வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிகள் அதில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் மாநில கல்விக் கொள்கை குழுவிற்கான அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் அக்டோபர் 15ஆம் தேதி வரை மாநில கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக்கள், ஆலோசனைகளை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை சம்பந்தமாக கல்வியாளர்கள், மாணவர்கள் தங்களுடைய ஆலோசனைகளை stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சல்களுக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.