சம்பா, தாளடி மற்றும் பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதே சமயம் காப்பீடு செய்யாமல் விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட முயற்சியால் சம்பா, தாளடி மற்றும் பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 22.11.2023 வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
எனவே, சனி (18.11.2023) மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் (19.11.2023) பொது சேவை மையங்கள் செயல்படுவதால் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 22 ஆம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது, என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசு முதன்மை செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.