ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 16 ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்களில் கச்சத்தீவு - தனுஷ்கோடி இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்போது அங்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி சட்டவிரோதமாக மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 27 பேரைக் கைது செய்தனர். மேலும் 5 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யபட்ட மீனவர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மீனவர்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிந்து இன்று (26.10.2023) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேருக்கு வரும் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மீனவர்கள் 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விடுவிக்காவிட்டால் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்களை ஒன்றிணைத்து மண்டபத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்திருந்தனர். இந்த சூழலில் மீனவர்கள் 15 பேருக்கு வரும் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.