புதுச்சேரியில் நில அபகரிப்பு தொடர்பாக கவர்னர் மாளிகையில் புகார் அளிக்கலாம் என துணை நிலை ஆளுநர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் தனது அலுவலகத்தில் கடந்த 6-ஆம் தேதி நில அபகரிப்பு மற்றும் சொத்து தகராறுகள் குறித்து பொதுமக்கள் புகார் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, ‘நில அபகரிப்பு மற்றும் சொத்து தகராறு சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது துரிதமாக விசாரணை நடத்தி வழக்குகளை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி, போலீஸ் டி.ஜி.பி பாலாஜி ஸ்ரீவஸ்தவா மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நில அபகரிப்பு விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில் அவர், போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"பொதுமக்கள் அளிக்கும் நில அபகரிப்பு தொடர்பாக வரும் புகார்களை போலீசார் முக்கிய வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். புகார்கள் மீது உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் உண்மை தன்மையை குறித்து ஆராய வேண்டும்.
மேலும் புகார்தாரருக்கு மிரட்டல் அல்லது யாராவது துன்புறுத்தினால் போலீஸ் டி.ஜி.பி.யிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். அதேபோல் ராஜ்நிவாஸ் (கவர்னர் மாளிகை) குறைகேட்கும் நேரத்தில் புகார் தெரிவிக்கலாம். 1031 என்ற இலவச எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இனி புதுச்சேரியில் நில அபகரிப்பு நடப்பதை தடுப்போம்". இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.