திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ள 'செண்டு மல்லிகை' பூவிற்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு தளர்வு முதல் பூக்கள் விற்பனை சற்று உயர தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பூக்களுக்கு கிராக்கி ஏற்படுவது போல் புரட்டாசி மாதத்தில் செண்டுமல்லி பூவிற்கு நல்ல கிராக்கி ஏற்படும். இதனால், கடந்த காலங்களில் செண்டுமல்லி பூ ஒரு கிலோ ரூபாய் 80 முதல் ரூபாய் 100 வரை விற்பனையானது.
அந்த எதிர்பார்ப்பில் தற்போது விவசாயிகள் செண்டுமல்லி பூக்களைப் பறித்து மார்க்கெட்டுக்கு கொண்டு வர தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக, ஒரு கிலோ செண்டுமல்லி ரூபாய் 15 முதல் ரூபாய் 20 வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை பூக்கள் ஏற்றுமதியாளர் முருகேசன் கூறும்போது, “கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு அதிக அளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் செண்டு மல்லி பூ வரத்து அதிகமாக இருப்பதாலும், கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் தொடர்மழை பெய்து வருவதாலும் ஏற்றுமதி குறைந்துபோனது. இதனால், விலை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது” என்று கூறினார். செண்டுமல்லி பூவிற்கு எதிர்பார்த்த நேரத்தில் விலை கிடைக்காததால் நிலக்கோட்டை விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.