Skip to main content

விதிமீறல் விபரீதம்! சிவகாசியில் ஒரே நாளில் இரு விபத்துக்கள்! பட்டாசுத் தொழிலாளர்கள் நால்வர் பலி!

Published on 06/04/2018 | Edited on 06/04/2018
thooki

 

‘பிரிக்க முடியாதது எதுவோ?’ என்று சிவகாசியில் கேட்டால், பட்டாசு ஆலைகளும் விபத்துக்களும் என்றே பதில் வரும். பட்டாசு விபத்துக்களால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது. இன்று ஒரே நாளில் இருவேறு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு,  தலா இருவர் வீதம் நால்வர் பலியாகியிருக்கின்றனர். 100 சதவீத காயங்களுடன் இருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். நீண்ட நேரம் போராடி, தீயணைப்புத் துறையினர் பட்டாசு ஆலைகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். 

 

சிவகாசி அருகிலுள்ள வெம்பக்கோட்டை – ராமுத்தேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு, சேகர், ரவி ஆகிய இருவர் உயிரிழந்தனர். அதேபோல, காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு, சுப்பிரமணியன், தெய்வானை ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டனர். மேலும், ரவிகுமார், செந்தில்குமார், பழனிச்சாமி, முத்துமாரி, மகேஷ் ஆகிய 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

vc

 

தூக்கு மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டும், விதி மீறலாக மரத்தடியில் பட்டாசு உற்பத்தி செய்ததாலும், மேற்கண்ட விபத்துக்கள் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

 

பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி “விதிமீறலாக பட்டாசு ஆலைகளைக் குத்தகைக்கு விடுகின்றனர். விதிமீறல்கள் நடக்கின்றனவா என்று கண்காணிக்க வேண்டிய அரசுத்துறையினரோ, லஞ்சம் வாங்கிக்கொண்டு, எதையும் கண்டுகொள்வதில்லை. அரசு அலுவலர்களின் சுயநலமும் அலட்சியமும், விதிகளை மீறும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சிலரின் பேராசையும், விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன. இத்தகைய தவறுகளால்,  அப்பாவித் தொழிலாளர்களின் உயிர் பறிபோகிறது.” என்றார் வேதனையோடு.   

 

பட்டாசு ஆலை விபத்துக்கள் தொடர்வதும், உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் தொடர்கதை ஆகிவிட்டது. ஆனாலும், லஞ்சம் வாங்கும்  அரசுத்துறையினருக்கோ, பணத்தாசை கொண்ட  பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கோ, யாருக்கும் வெட்கமில்லை!


 

சார்ந்த செய்திகள்