இன்றைய உலகம் ஸ்மார்ட் உலகம். அலைபேசி முதல் அடுப்பு வரை அனைத்தும் ஸ்மார்ட்டான பொருட்களையே பயன்படுத்த ஆயத்தமாகி வருகிறது இளைய தலைமுறை. அரசாங்கம் மட்டும் அப்படியே இருந்தால் எப்படி? தன் பங்குக்கு அரசும் ஒவ்வொரு துறையாக கணினிமயமாக்கி வருகிறது.
அதன் ஒரு கட்டமாக ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ், ரோடு டாக்ஸ் உள்ளிட்ட விவரங்களை தனித்தனி ஆவணமாக வைத்துக்கொண்டிருக்காமல் ஒரே ஆவணமாக- ஸ்மார்ட் கார்டு வடிவில் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அளவில் ஒரு ஸ்மார்ட் கார்டு, அதில் ஒரு கணினி சிப். மொத்த விவரங்களும் அதில் இடம்பெறும்படி பார்த்துக்கொள்வது என திட்டமிடப்பட்டுவருகிறது. இந்த ஸ்மார்ட் கார்டுகளை தயாரிக்கும் பணியை, டெண்டர் மூலம் தேர்ந்தெடுக்கும் தனியார் நிறுவனங்களிடம் அளிக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது என்கிறார். போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி.
இந்த ஸ்மார்ட் கார்டுக்கென கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாதென தற்சமயம் திட்டமிடப்பட்டிருக்கிறது. புகைப்படம் கொடுத்த அரை மணி நேரத்தில் இந்த ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இதில் வாகன ஓட்டிகளுக்கு எப்படி வசதியிருக்கிறதோ…. அதேபோல போக்குவரத்துக் காவலர்களுக்கும் நிறைய வசதியிருக்கிறது.
இந்த அட்டையில் வாகனத்தின் முந்தைய உரிமையாளர், காப்பீட்டு விவரங்கள், முன்பு போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் அதுகுறித்த விவரங்கள், பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் இடம்பெறும். காவலர்களுக்கு இந்த ஸ்மார்ட் கார்டை வாசித்துச் சொல்லும் ஸ்மார்ட் கார்டு ஸ்கேனர்கள் வழங்கப்படும். அட்டையை இதில் நுழைத்தவுடன் ஓட்டுநர் உரிமம் ரத்தாகியிருக்கிறதா, முன்பு ஏதும் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டிருக்கிறதா என்பதைக் காட்டிவிடும். அடிக்கடி விதிகளை மீறும், விபத்தை ஏற்படுத்தும் நபர்களை போக்குவரத்து விதிகளை தொடர்ந்து மீறுபவர் என பட்டியலிட்டு கடுமையான தண்டனை வழங்க பரிந்துரைக்கலாம்.
எல்லாம் சரி, போக்குவரத்து உரிமம், காப்பீடு என அனைத்தும் வைத்திருந்தாலும் கைநீட்டும் போலீஸைக் காட்டிக்கொடுக்க ஸ்மார்ட் லைசென்ஸில் ஏதாவது வழிவகை செய்தால் நல்லாயிருக்கும்.